
அன்புள்ள அம்மா...
என் வயது, 19. இளங்கலை விலங்கியல், 2ம் ஆண்டு படிக்கும் மாணவி. விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன என, எல்லா ஜீவராசிகளின் மாமிசங்களும், கொடிய விஷத்தன்மையுடன் இருந்து, அதை சாப்பிட்ட கணம் மனிதன் இறந்து விடுவான் என்ற நிலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
மாமிசம் சாப்பிட்டால் இறப்போம் என்ற பயத்தில், பூமியில் எல்லா மனிதர்களும் சைவர்களாய் இருப்பர். உலகில் உள்ள ஜீவராசிகளும், மனிதர்களின் அச்சுறுத்தல் சிறிதும் இன்றி, மகிழ்ச்சியாய் வலம் வரும். மாமிசங்களை முழு விஷமாக்கும் வகையில் இறைவன் அல்லது இயற்கை ஏன் செயல்படவில்லை; இது குறித்து தெளிவாக விளக்குங்கள்.
இப்படிக்கு,
லெ.உலகம்மை.
அன்பு மகளே...
இறைவன் அல்லது இயற்கைக்கு மனிதனும், பாக்டீரியாவும் ஒன்று தான். உயிர்களின் தொடர்ச்சி தான் முக்கியம்.
பூமியில் ஒவ்வொரு உயிரினமும் உணவுத் தேவைக்காக மற்றொரு உயிரினத்தை சார்ந்தே இருக்கின்றன.
புழுக்களை, கோழிகள் உண்கின்றன. கோழிகளை, மனிதன் தின்கிறான்; மனிதன் இறந்தவுடன் உடல் நுண்ணுயிர்களாலும், பூஞ்சை, காளான்களாலும் சாப்பிடப்படுகிறது; மீண்டும் புதிய புழுக்கள் பிறக்கின்றன. புழு - -கோழி - -மனிதன் - புழு... இப்படி சுழற்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மனிதன் மாமிசத்தில் நீர், 62 சதவீதம், கொழுப்பு, 16 சதவீதம், புரோட்டீன், 16 சதவீதம் உள்ளன.
மிருகங்களின் மாமிசத்தில் நீர், 75 சதவீதம், கொழுப்பு, 2.5 சதவீதம், புரோட்டீன், 19 சதவீதம் உள்ளன.
மீன், கோழி முட்டையில், 70 முதல், -85 சதவீதம் புரதம் உள்ளது.
உலகின் ஜீவராசிகள் அனைத்தும், ஒரே மாவில் செய்யப்பட்ட வகை வகையான பண்டங்கள்.
ஒன்றில் கொழுப்பும், புரதமும் வைத்து, இன்னொன்றில் சயனைடு போன்ற விஷமா வைக்க முடியும்.
மனிதன் சிவப்பு மாமிச வகை. பன்றியின் இறைச்சியுடன் சுவை ஒத்து போகும். நர மாமிசம் சாப்பிடும் பலர் இன்னும் இருக்கின்றனர்.
பூமியில், 810 கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒருவர், 1,860 கிராம் உணவு உண்கிறார்.
உலகில், 92 சதவீதம் பேர் அசைவர்களாக உள்ளனர்; ஏழு சதவீதம் பேர் சைவ உணவுப் பழக்கம் உடையவர்கள்; நனி சைவர்கள், 1 சதவீதம் இருக்கின்றனர்.
உலகில், 2,590 கோடி கோழிகளும், 94 கோடி மாடுகளும், 78 கோடி பன்றிகளும் உள்ளன. கடல் உணவுகளும் ஏராளம் கிடைக்கிறது. காய்கறிகள், அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் என, பல்லாயிரம் கோடி கிலோ சைவ உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை தின்று தான் மனிதன் உயிர் வாழ்கிறான்.
உலகில், எல்லா வகை மாமிசமும் விஷமானால் என்ன நடக்கும்...
அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், காய்கறிகளின் உற்பத்தியை, இப்போது உள்ளதை விட, 15 மடங்கு உயர்த்த வேண்டி வரும். மிருகங்களின், பறவைகளின், ஊர்வன, நீந்துவன வகைகளின் எண்ணிக்கை தாறுமாறாய் பெருகி, மனிதர்களுக்கு பெரும் தொந்தரவாய் அமையும்; உணவு பஞ்சம் தலை விரித்தாடும்.
விலைவாசி வானை முட்டும். கால்நடை, கோழி பண்ணைகள் இருக்காது; மீனவர்கள் உட்பட, மாமிச உற்பத்தி சார்ந்த அனைத்து பணியாளர்களும் வேலை இழப்பர். உலக பொருளாதாரம் தலைகீழ் ஆகும். உலகின் உணவு சமநிலை பாழாகும்; படைப்பு தத்துவம் கேள்விக்குறி ஆகும். எனவே, அவரவருக்கு பிடித்ததே இனிய உணவாகும் என்பதை புரிந்து செயல்படு.
-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.