
உலகிலேயே மிகப்பெரிய விதை உடைய தாவரம், கடல் தேங்காய். இது, இரட்டைத்தேங்காய், கடல்பனை, மாலத்தீவுத் தேங்காய் எனவும் அழைக்கப்படுகிறது.
பெரிய வகை தேங்காய் போல இருக்கும். உட்புறம் பனை விதையில் உள்ளது போல் பிளவுடன் காணப்படும். இந்திய பெருங்கடலில், செஷசல்ஸ் மற்றும் மாலத்தீவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் கோல்கட்டா தாவரவியல் பூங்காவில் ஒரு மரம் பராமரிக்கப்படுகிறது.
பனைமரம் போல இதில் ஆண், பெண் பாகுபாடு உண்டு. ஆண் மரத்தில், ஆறு அடி நீளத்தில் பூ மலரும். பெண் மரம் முளைத்து, 100 ஆண்டுகளுக்கு பின் பூக்கத் துவங்கும்.
வாழ்நாளில், 100க்கும் குறைந்த விதைகளையே உற்பத்தி செய்யும். மரத்தில் பூ மலர்ந்து கனிய, 10 ஆண்டுகள் ஆகும். விதையின் வெளிப்புற நார் அடர்த்தியுடன் வலுவாக இருக்கும். கனிப்பகுதி கெட்டியான ஓட்டுக்குள் இருக்கும். முதலில் நுங்கு போல் காணப்படும். முற்றியதும் தேங்காய் போல சுவைக்கும்.
முற்றிய கனி உதிர்ந்த பின், கடல் நீரில் அமிழ்ந்து கிடக்கும். நீண்ட நாட்களுக்கு பின், மிதந்து கரையில் ஒதுங்கும். கடல் நீரோட்டத்தின் வழியாக விதை பரவும். விதை முளைக்கத் துவங்கி முதல் இலை தோன்ற மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.
இந்த மரம், 35 மீட்டர் உயரம் வரை வளரும். சுற்றளவு, 12 அடி இருக்கும். இலைகள் விசிறி வடிவில் பனை ஓலை போல் இருக்கும். ஒரு இலை, 10 மீட்டர் உயரமும், 4.5 மீட்டர் அகலமும் இருக்கும். விதை, 1 அடி உயரமும், 3 அடி சுற்றளவும் கொண்டிருக்கும். ஒரு விதையின் எடை, 23 கிலோ வரை இருக்கும்.
எடை அதிகம் என்பதால், நீரினுள் விழுந்தவுடன் மிதப்பதில்லை. அமிழ்ந்து, கடலின் அடிப்பகுதிக்கு போய் விடும். சில நாட்களுக்கு பின், எடை குறையும் போது, நீர்மட்டத்தில் மிதக்கும்.
இதை முதலில் பார்த்த விஞ்ஞானிகள், நீருக்கடியில் வளரும் தாவரத்தின் விதை என்றே நம்பினர். எனவே, பிரெஞ்சு மொழி சொல்லான, 'கோகோ டி மீர்' என்ற பெயரில் அழைத்தனர். அதன் பொருள் கடல் தேங்காய் என்பதாகும். பண்டை காலத்தில் துறவிகள், இந்த விதையை குடைந்து திருவோடு போல் உருவாக்கி, பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர்.
- நிகி