
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு எப்போதாவது கீழ்க்கண்ட வினோத அனுபவம் கிடைக்கிறது.
வீட்டிற்கு முன், பின் அறிமுகமில்லாதவர் வந்தால் அவருடன் நன்றாக பேசுகிறேன்; பேசிய சொல், கோணம், லைட்டிங்குடன் புதிதாக வந்தவரிடம் ஏற்கனவே பேசியதாக உணர்கிறேன். நான் பேசுவது மறு ஒளிபரப்பு போல் இருக்கிறது; இது எனக்கு கிடைத்திருக்கும் விசேஷ சக்தியா அம்மா... புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன். எண்ணிப் பார்ப்பதே வியப்பாக இருக்கிறது. இது பற்றி விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு,
கி.பொன்னம்மாள் கயல்.
அன்பு மகளே...
உனக்கு கிடைத்து வரும் வினோத அனுபவத்தை ஆங்கிலத்தில், 'தேஜாவூ' என்பர். தமிழில் பூர்வானுபவம், முற்பட்டறிவாய் திரிந்துணர்வு மற்றும் பட்டறிந்த உணர்வு என்றும் கூறுவர். சிலர் இந்த அனுபவத்தை, 'கடவுள் நம்மிடம் பேசுகிறார். விதி பாடம் நடத்துகிறது; இணைபிரபஞ்சங்களின் இணைபதிப்புகளின் ஒரே அனுபவம்...' எனவும் கூறுவர்.
தேஜாவூ என்பது நினைவாற்றலின் ஒரு மாயை என்கிறது விஞ்ஞானம்.
உலக மக்களில், மூன்றில், இரண்டு பேர் வாழ்நாளில் ஒரு முறையாவது தேஜாவூ என்ற இது போன்ற உணர்வை பெறுகின்றனர்.
அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், அதிகம் சினிமா பார்ப்போர், அடிக்கடி வரும் கனவை நினைவு கூர்வோர், திடீரென பொருளாதார நிலையில் உயர்ந்தோர், அதிகம் படித்தோர், இளம் வயதினர் தேஜாவூவில் சிக்குகின்றனர்.
புதுமையான, அறிமுகமில்லாத அனுபவத்தை, 'ஜமைஸ்வூ' என்பர்.
தேஜாவூ என்ற வார்த்தையை, எழுத்தாளர் எமிலி போயிராக், 1876ல் எழுதிய, 'எதிர்காலத்தின் உளவியல்' என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்; அவர், தேஜாவூ என்பதை நினைவுகளின் நினைவூட்டல் என முறையாக வரையறுத்துள்ளார்.
சில மருத்துவக் காரணங்களாலும், தேஜாவூ அனுபவம் ஏற்படலாம். அது பற்றி பார்ப்போம்...
பொட்டு மடல் மூளை பகுதி சார்ந்த கை, கால் வலிப்பு, ஒற்றை தலைவலி போன்றவற்றால் இதுபோல் நிகழ வாய்ப்பு உண்டு.
ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பாரீஸ் நகரில் ஈபில் கோபுரம் உலக பிரசித்தி பெற்றது. இதுவரை நீ அங்கு சென்றிருக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஈபில் டவர் பற்றிய புகைப்படங்கள், சலனப்படங்கள், தகவல் குறிப்புகளை படித்திருப்பாய். இப்போது, ஈபில் டவரை முதல் முறையாக பார்க்கிறாய் என்றால் அதைப் பற்றி கேட்டவை, பார்த்தவை எல்லாம் தேஜாவூ அனுபவமாக மலரும்.
இன்னொரு சாத்தியம்...
மூளைக்கு உள் வரும் சிக்னல்களை வரிசைபடுத்துவது மூளையின் இடது அரைக்கோளத்தில் உள்ள பொட்டு மடல் ஆகும்.
ஒரு காட்சியை பார்த்த சமிக்ஞை, இரண்டு முறை பொட்டு மடலுக்குள் நுழைகின்றன. இரு சமிக்ஞைகளுக்கு இடையே, மிகச்சிறிய நேரமான மில்லி நொடி தாமதமானால் என்ன நடக்கும்... ஒரே காட்சியை பார்த்த போது கிடைத்த இரண்டு சிக்னல்களும் ஒத்திசையா விட்டால், அவை தனித்தனி அனுபவங்களாக செயலாக்கப்படும். இரண்டாவது சிக்னலை உணரும் போது, முதல் சிக்னல் தேஜாவூவாக வரும். இதை இரட்டை நரம்பியல் செயலாக்கம் என்பர்.
நீ கற்பனை செய்கிறபடி எந்த விசேஷ சக்தியும் உனக்கு கிடைக்கவில்லை. இதைப் பற்றி எண்ணி, படிக்கும் நேரத்தை விரயம் செய்யாதே... மனதில் சிந்தனைகளை குழப்பிக் கொள்ளாதே...
நான் எடுத்துரைத்து இருக்கும் இந்த விளக்கம் கூட, ஏற்கனவே நீ படித்திருப்பது போல் தெரியும். எனவே, உண்மையான வாழ்க்கை அனுபவங்களை புரிந்து கொள். அதுவே வாழ்வுக்கு சரியான வழியை காட்டும்.
- அள்ள குறையா அன்புடன், பிளாரன்ஸ்.