
அன்புமிக்க ஆன்டி...
என் வயது, 17; பிரபல தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவன். எங்கள் வகுப்பில், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்ற மிதப்பில் ஒருவன் இருக்கிறான். யாரைப் பார்த்தாலும், 'உலகில் நான் தான் அழகானவன், அறிவானவன். விரும்பினால் தசவதானியாக மாறுவேன்...' என, சத்தியம் செய்கிறான்.
ஆனால், நிஜத்தில், அவனுக்கு ஒன்றும் தெரியாது. அழகிலும், அறிவிலும் ஓரளவு தான் சிறந்தவன். அவன் கர்வத்தை எப்படி திருத்துவது என்று தெரியவில்லை. இதற்கு சரியான அறிவுரை தாருங்கள். அவன் திருந்தும் வகையில் எடுத்துரைக்க வழிகாட்டி உதவுங்கள்.
இப்படிக்கு,
டி.மாசிலாமணி.
அன்புள்ள மகனே...
உன்னுடன் படிக்கும் வகுப்பு தோழன், 'டன்னிங் கிரகர் எபக்ட்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த பாதிப்பு உடையோர், தங்கள் திறமையிலும், அழகிலும் அதீத அசட்டு நம்பிக்கை கொள்வர்; இவர்கள், மனோதத்துவ ரீதியாக பாரபட்சம் உடையவர்கள்.
உன் நண்பனுக்கு மட்டுமா இந்த பிரச்னை இருக்கிறது என நினைக்கிறாய்.
உலகில், பெரும்பாலோர், தான் ஒரு மேதை என்ற பிரமையில் மிதக்கின்றனர். அதன்படி எண்ணியே பிறரிடம் பழகி வாழ்கின்றனர். அதனால், பல பிரச்னைகள் ஏற்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட கேள்வித்தாளை ஆயிரம் பேரிடம் கொடுத்து, விடையைப் பூர்த்தி செய்ய சொன்னால் சில உண்மைகளை அறியலாம்.
அந்த கேள்விகள் குறித்த விபரங்களை பார்ப்போம்...
* நான் நண்பர்கள், உறவினர்களை விட அழகானவன்
* நான் நண்பர்கள், உறவினர்களை விட அறிவானவன்
* என் திறமைகளை அறியாமல் இவ்வுலகம் என்னை குறைத்து மதிப்பிடுகிறது
* கடவுளுக்கும், எனக்கும் மிக நெருக்கம் உண்டு
* நான் சாப்பாட்டு ராமன் அல்ல
* நான் மற்றவர் போல அழுக்கானவன் இல்லை மிகவும் சுத்தமானவன்
* நான் துாங்குமூஞ்சி அல்ல
* அனுமதித்தால் கப்பல், விமானம், ராக்கெட் செலுத்துவேன்
* நான் நாட்டின் குடியரசு தலைவர் பதவிக்கு பொருத்தமானவன்
* சினிமாவில் நடிக்க சென்று இருந்தால், சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்
இவற்றுக்கு ஆம் அல்லது இல்லை என குறிப்பிட்டு பதில் எழுதி தொகுக்க வேண்டும்.
ஆயிரம் பேரில், 980 பேர், 10 கேள்விகளுக்கும், 'ஆம்' என்று தான் பதிலளித்திருப்பர்.
யாருமே, பொதுவாக தன்னை உணர்தலோ, சுயமதிப்பீடோ செய்து கொள்வதில்லை.
இந்த மனக்கிறுக்கு உள்ளோர் எங்கும் நிறைந்திருப்பர்.
குறிப்பாக, இது போன்றோரை எங்கெங்கு பார்க்கலாம் என கூறுகிறேன் கேள்...
* பணியிடம் மற்றும் தொழில் சார் சூழல்
* வெகுஜன தொடர்பு ஊடக விவாதங்களில்
* கல்வி மற்றும் கற்றல் சூழலில் இருப்போர்.
உயர்வாய் முடிவு எடுப்பதற்கு முன், ஆழமாக சிந்திக்க வேண்டும். எதிர்மறை விமர்சனங்களை ஏற்க வேண்டும். அது பற்றி அலசி ஆராய தெரிந்திருக்க வேண்டும். அறிவு திறன் பற்றி கேள்விகள் எழுப்பி, 'நாம் யார்' என, உறுதி செய்தல் வேண்டும். எளிமையும், திறந்த மனமும் கொண்டிருக்க வேண்டும்.
நான் எதற்கும் உபயோகம் இல்லாதவன் என நினைக்கும், 'இம்போஸ்டர் சின்ட்ரோம்' என்ற நிலையும் மிகத் தவறானது தான். அதையும் திருத்திக் கொள்ள பழக வேண்டும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.