
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். எங்கள் குடும்பத்தில், அசைவம் விரும்பி சாப்பிடுவோம். குறிப்பாக, மீன்கள்; என் தந்தை ஒரு கடல் மீன் விரும்பி. ஒவ்வொரு நாளும் அதை உணவாக்க விரும்புவார். அதிலும் சமைத்த கடல் மீனை தான் சாப்பிடுவார். ஏரி, குளம், ஆற்றில் பிடிக்கும் மீன்கள் பற்றி பேசினால், 'நல்ல தண்ணீர் மீனெல்லாம் வேஸ்ட்; கடல் மீன் தான் பெஸ்ட்...' என்கிறார்.
சாப்பிடுவதற்கு ஏற்றது கடல் மீனா... நன்னீர் மீனா... என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். என் குழப்பம் போக்கி தெளிவாக கூறுங்கள்.
இப்படிக்கு,
டி.கவியோவியத் தமிழன்.
அன்பு மகனுக்கு...
உலகில், 32 ஆயிரத்து, 500 வகை கடல் மீன்கள் உள்ளன. அதே நேரத்தில், 10 ஆயிரம் வகை நன்னீர் மீன்களும் உள்ளன.
நன்னீர் மீன்கள் உயர் அடர் அதாவது, 'ைஹபர்டானிக்' தன்மை உடையவை. உப்பு சத்தும் அதிகம்; ஜவ்வூடு பரவல் முறையில் நீர் எப்போதும், நன்னீர் மீன்களின் உடலுக்குள் ஓடியவாறு இருக்கும்.
கடல் மீன்கள் தாழ் அழுத்தம் என்ற 'ைஹபோடானிக்' என்ற தன்மை உடையவை. உப்பு சத்து குறைவு; நீர் எப்போதுமே கடல் மீன்களின் உடலை விட்டு வெளியே பாய்ந்தவாறு இருக்கும். சிலவகை தவிர, நன்னீர் மீன்கள் கடல் நீரிலோ, கடல் மீன்கள் நன்னீரிலோ வாழாது.
ஆற்று நீரில், 1 சதவீதத்துக்கும் குறைவான அளவு உப்பு இருக்கும்.
ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் இடத்தில், நீரில் மூன்று சதவீதம் உப்பு கலந்து இருக்கும்.
கடல் நீரில், 3 சதவீதத்துக்கு அதிகமான உப்பு இருக்கும்.
கடல் மீன்களில் வரத்து அதிகம். அதனால், வேண்டியதை தெரிவு செய்து உண்ணலாம்.
நீங்கள், கடலுக்கு அருகில் வசிக்கிறீர்கள்; மத்தி மீன், கானாங்கெளுத்தி, வஞ்சிரம், வெள்ளி மீன், சூரை மீன் உள்ளிட்ட ஆயிரம் கடல் மீன்களை வாங்கி சமைக்கலாம்.
நன்னீர் மீன்களில், கெண்டை, கெளுத்தி, விரால், குளத்து இரால், அயிரை, வெளிச்சி போன்ற வகைகளே உண்ணக் கிடைக்கின்றன. மக்களுக்கு முள் இல்லாத மீன்கள் தான் பிடிக்கும்; பெரிய கடல் மீன்களில் துளி முள் இருக்காது; அல்வா போல சாப்பிடலாம்.
நன்னீர் மீன்கள் இறந்து விட்டால், சமைத்தால் ருசிக்காது. கடல் மீன்களை எத்தனை நாள் வேண்டுமானாலும், குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து சமைத்து சாப்பிடலாம்; அதில், பிரத்தியேகமான ஒரு சுவை இருக்கும். கடல் மீன் சாப்பிடுவது சிறிதளவு கடலை விழுங்குவது போல...
உலகின் அழகான கடல் மீன்களில் ஒன்று, கோமாளி மீன். உலகில் அரிதானது சீன துடுப்பு மீன்.
கடல் மீனோ, நன்னீர் மீனோ இரண்டிலும், 'ஒமேகா 3 சத்து' அதிகம் உள்ளது; அது இதயத்துக்கும், மூளைக்கும் நல்லது.
மீன் உணவை தினமும் சாப்பிடக் கூடாது. வாரத்துக்கு இருமுறை சமைத்து உண்டால் சிறப்பு.
என்னை கேட்டால், கடல் மீன்களை விட, நன்னீர் மீன்கள் ஊட்டச்சத்து மிக்கவை. தேங்காய் சோறும், விரால் மீன் குழம்பும் உன் தந்தை ஒரு முறை சாப்பிட்டால், நன்னீர் மீன்கள் விரும்பும் கட்சி பக்கம் சாய்ந்து விடுவார்; மீன் மனிதனுக்கு ஆதிகாலம் முதலே உணவாக உள்ளது.
-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.