
ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.பள்ளியில், 2004ல், பிளஸ் 1 படித்த போது பொருளியல் ஆசிரியராக இருந்தார் தேவ ஆசீர்வாதம். பொது அறிவை கற்றுத் தந்து, 'தன்னலமின்றி செயல்பட்டு இந்த பூமியை பாதுகாக்க முடிந்ததை செய்ய வேண்டும்...' என வலியுறுத்துவார். அது மனதின் ஆழத்தில் பதிந்தது.
அன்று பள்ளி சென்ற போது, வேரோடு பிடுங்கிய நிலையில் ஆலமரக்கன்று ஒன்றை சாலையோரத்தில் பார்த்தேன். அதை பாதுகாப்பாக வளர்க்க முடிவு செய்தேன்.வீட்டில், சிறு தொட்டியில் பராமரித்து சற்று வளர்ந்ததும், கண்மாய் கரையில் நட்டு தண்ணீர் ஊற்றினேன். அதன் வளர்ச்சியால் மனதில் மகிழ்வு ஏற்பட்டது. பின், ஊரைச் சுற்றி மரக்கன்றுகள் நடத் துவங்கினேன்; என் வீட்டருகிலும் வளர்க்கிறேன். பிறருக்கும் இலவசமாக கொடுத்து, விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறேன்.
என் வயது, 36; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பள்ளி வகுப்பறையில் அன்று மனதில் விழுந்த விதையே இன்று பேரார்வமாக வளர்ந்துள்ளது. என் ஆர்வ செயல்பாட்டுக்கு தர்மபுரி பசுமை விழாவில் நம்மாழ்வார் விருது கிடைத்தது. பசுமைக் காவலர், சுற்றுச்சூழல் காவலர் போன்ற விருதுகளும் கிடைத்துள்ளன. அரும்பணிகள் செய்ய துாண்டிய அந்த ஆசிரியரை போற்றுகிறேன்.
-பா மாரியப்பன் விருதுநகர்