
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். வினோதமான கேள்வி ஒன்று மனதில் தொடர்ந்து ஒலித்தவாறு இருக்கிறது. மனித மனமும், உயிரும், உடலில் எங்கு குடியிருக்கின்றன. இது பற்றி சிந்தித்து சோர்வடைந்து விட்டேன்.
இதற்கு, தகுந்த பதிலை பெற விரும்புகிறேன். தெளிவாக கூறி, என்னை அமைதிபடுத்துங்கள். அதை தெரிந்து கொண்டால், என் வாழ்க்கை பாதை சரியாக அமையும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
எம்.என்.சத்தியமோகன்.
அன்பு மகனே...
உன் தேடல் மிகச் சிறப்பானது.
முதலில் ஒரு பொன் மொழியை கூறுகிறேன் கேள்.
'மிகச்சிறந்த மனம் கருத்துகளை விவாதிக்கிறது; சராசரி மனம் அன்றாட நிகழ்வுகளை விவாதிக்கிறது; சின்னஞ்சிறு மனம் சக மனிதர் குறைகளை விவாதிக்கிறது...'
இந்த பொன்மொழியிலே, உன் கேள்வியின் சிறப்பு அமைந்து உள்ளது.
உன் மனதில் எழுந்துள்ள கருத்துகளை விவாதிக்கலாம்...
மனித மூளையின் மேற்பகுதியில் உள்ளது பெருமூளை.
அதன் புறணி பகுதி, நரம்பு மண்டல இயக்கமே மனம்.
மூளையில் மட்டுமே நினைவு உள்ளது.
நினைவுகளின் தொகுப்பே மனம்.
மூளையின் முன் மடல், 'பிராண்ட்ல் லோப்' என அழைக்கப்படுகிறது.
அதுதான் சிந்திக்க வைக்கிறது.
ஞாபகங்களை சேர்த்து வைப்பது பொட்டு மடல் எனப்படும், 'டெம்போரல் லோப்' ஆகும்.
பேசுவது, சிந்திப்பது, அமைதியாக இருப்பது எல்லாம், 1,300 கிராம் மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் ரசாயன மாற்றமே ஆகும்.
மனம் என்று சொல்லும் போது, சிலர் இதயம் இருக்கும் நெஞ்சுப்பகுதியைத் தொட்டுக் காட்டுவர்.
இதயம் ஒரு சிறிய விசைப்பம்பு; அது, ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கும் எடுத்து செல்ல உதவுகிறது.
அதன் செயலுக்கும், சிந்தனைகளுக்கும், உணர்வுகளுக்கும், நேசம், அன்பு, பாசம் போன்றவற்றுக்கும் துளியும் தொடர்பில்லை.
மெய், வாய், கண், மூக்கு, காது என்பவை ஐம்புலன்கள். அவற்றின் வழி வரும் செய்திகளை உள்வாங்கி, அதற்கேற்ப செயலை ஒருங்கிணைத்து வெளிப்படுத்துவது மனதின் வேலை.
மனம் என்பது, நன்னெறிகள், குணாதிசயங்கள், நல்லெண்ணம் போன்ற உணர்வுகள் சார்ந்தது.
அறிவு என்பது, படித்த, ஆராய்ந்த உண்மைகள். அதாவது, சரி, தவறை, பின் விளைவுகளை கொண்டு முடிவு செய்தல் ஆகும்.
மனம் என்பது, உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையே உள்ள நுண் இணைப்பான மென்பொருள். உடலில், அது மூளையில் உள்ளது.
மனதை ஒருநிலைப்படுத்தினால் கிடைக்கும் இன்பங்களை, 'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்...' என அழகுடனும், தெளிவுடனும் குறிப்பிட்டுள்ளார் பழந்தமிழ் புலவரான அகத்தியர்.
மன அமைதியுடன் வாழக் கற்றுக்கொண்டால், நன்மைகள் பெருகும். வெற்றிக்கான பயணத்தில், மனதை, சில்மிஷம் சிறிதும் இல்லாமல் நிஷ்களங்கமாய் வைத்துக் கொள்வோம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.