
வறுமையில் வாடினான் பார்த்திபன்.
அவனுக்கு அழகிய மந்திரக்கோல் ஒன்றை பரிசளித்தார் முனிவர்.
'இதை மூன்று முறை மட்டும் பயன்படுத்தலாம். விரும்பும் அனைத்தும் கிடைக்கும்...'
இவ்வாறு, விதியை கூறி வரம் கொடுத்து மறைந்தார் முனிவர்.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் பார்த்திபன்.
ஆனாலும், 'முனிவர் கூறியது உண்மையாக இருக்குமா' என்ற சந்தேகம் ஏற்பட்டது.
மந்திரக்கோலை சோதித்து பார்க்க விரும்பினான்.
அப்போது, மிகவும் பசியாக இருந்தது.
மந்திரக்கோலை எடுத்து, 'உணவு வேண்டும்...' என கேட்டான்.
சிறிது நேரத்தில் அறுசுவை உணவு பதார்த்தங்கள் கிடைத்தது. எதை தின்பது, புறந்தள்ளுவது என தெரியாமல் திக்குமுக்காடினான்.
கண்டதை எல்லாம் சாப்பிட்டதால் வயிறு நிரம்பியது.
சிறிது நேரத்தில், உணவு வகைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன.
எல்லாவற்றையும், 'உண்ண தவறி விட்டோமே' என வருந்தினான்.
மதியவேளை மீண்டும் பசித்தது.
இம்முறை அசைவ உணவுகளை கேட்டு, மந்திரக்கோலை வேண்டினான்.
ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்திலும் தயாரித்த உணவுகள் பெரிய பாத்திரங்களில் வரிசையாக வந்தன.
நாவில் எச்சில் ஊறியது.
அவசர கோலத்தில் எடுத்து உண்டான்.
நிதானம் தவறியதால் எல்லா வகை உணவுகளையும் சாப்பிட இயலவில்லை.
மந்திரக்கோல் மகிமையை மறந்து, 'அனைத்து உணவையும் சாப்பிட, பெரிய வயிறு வேண்டும்...' என கேட்டான்.
பெரிய வயிறு கிடைத்தது. கண்டபடி உண்டதால் உப்பி புடைத்தது. ஏப்பம் விட்டான். பின், மயக்கம் வர துாங்கினான்.
எழுந்தபோது மந்திரக்கோலைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடி அதிர்ந்தான்.
அப்போது தான், முனிவர் பிறப்பித்த கட்டளை நினைவுக்கு வந்தது.
'மகிமை தெரியாமல், நாக்கின் ருசிக்கு அடிமையாகி, வரத்தை வீணாக்கி விட்டோமே' என, துயருடன் எண்ணி வருந்தினான் பார்த்திபன்.
பட்டூஸ்... எந்த செயலையும் திட்டமிட்டு நிறைவேற்றினால் வெற்றி அடையலாம்.
- பெ.பாண்டியன்