PUBLISHED ON : டிச 21, 2024

டிசம்பர் 25, கிறிஸ்துமஸ்!
மேற்கு ஆசியா பகுதியில் நாசரேத் நகரில் தங்கி இருந்தனர் மேரியும், ஜோசப்பும். அப்போது, ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் ஒரு உத்தரவை வெளியிட்டார். ரோமப் பேரரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ளதால், அனைவரும் அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேரி, கணவருடன் பெத்லகேம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே விடுதிகள் எல்லாம் நிரம்பியிருந்தன. தங்குவதற்கு இடமில்லை. ஒரு விடுதி உரிமையாளர், 'தொழுவத்தில் தங்கலாம்...' என அனுமதித்தார். வேறு வழியின்றி அங்கு குடியேறினர்.
சில நாட்களில் மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த தொழுவத்தில் இயேசு பிறந்தார். கால்நடைகள் மத்தியில், அந்தக் குழந்தை இளைப்பாறியது.
இயேசு பிறப்பைப் பற்றிய செய்தியை பெத்லகேமுக்கு அருகே வயல் வெளியில், ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தோருக்கு கூறினார் தேவதுாதர். அவர்கள் சென்று குழந்தை இயேசுவை தரிசித்தனர்.
தொலைதுார நாட்டில் வசித்தனர் மாகி என்ற மூன்று ஞானியர். அவர்களும் பார்ப்பதற்கரிய காட்சியை வானில் கண்டனர். இயேசு பிறந்த இடத்துக்கு மேல் அற்புத நட்சத்திரம் உதித்திருந்தது. உடனே, பெத்லகேம் நோக்கிப் பயணத்தை துவங்கினர்.
வழியில் அவர்களை சந்தித்த யூதா நாட்டின் மன்னன் ஏரோது, 'குழந்தை இயேசு பிறந்திருக்கும் இடத்தை அறிந்தது தெரிவிக்க வேண்டும்...' என கேட்டுக் கொண்டான். குழந்தையை வணங்க விரும்புவதாகவும் தெரிவித்தான் மன்னன்.
நட்சத்திரம் காட்டிய பகுதிக்கு சென்ற ஞானியர், குழந்தை இயேசுவைக் கண்டனர். மண்டியிட்டு வணங்கி, பொன், துாபவர்க்கம், வெள்ளைப்போளம் பரிசாக தந்து திரும்பினர். உண்மையில், குழந்தையை கொல்ல திட்டமிட்டுருந்தான் மன்னன். இதை அறிந்திருந்த ஞானியர், வேறு மார்க்கத்தில் இருப்பிடத்துக்கு திரும்பி சென்றனர்.
உலகின் மீட்பர் இயேசு, அன்பு, கனிவு மற்றும் அமைதியின் வடிவமாக திகழ்கிறார். அவர் வளர்ந்த பின், ஏழை மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றும் பணியை செய்தார். வறுமையில் வாடியோர் பிணியை போக்கினார்.
அந்த உணவும், உபசரிப்பும் ஒரு போதும் குறையவில்லை. பசித்த வயிறுகள் நிறையும் வரை, ரொட்டியும், மீன் உணவும் பெருகிய அற்புதமும் நிகழ்ந்தது. அமைதியுடன் வாழ உரிய வழிமுறைகளை உலக மக்களுக்கு போதித்தவர் இயேசு.
அவர் பிறந்தநாளில் கருணையும், இனிமையும் எங்கும் நிறைய வாழ்த்துகள்.
- ஜி.எஸ்.எஸ்.
இயேசுவின் பொன்மொழிகள்!
முயற்சியுடன் தேடினால் உரியதை கண்டடையலாம்
நம்பிக்கையுடன் தட்டிக் கொண்டே இருத்தால் கதவு திறக்கும்
நற்குணங்களுடன் பூரணமாக வாழ முயற்சியுங்கள்
பாம்பு போல விவேகமுடனும், புறா போல கபடமில்லாமலும் வாழுங்கள்
அறிவு, துாய்மையானது; கண்ணியத்தை வளர்க்கிறது; இணக்கத்தை ஏற்படுத்துகிறது; கருணை நிறைந்தது
பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். சபிப்பவரையும் வாழ்த்துங்கள். வெறுப்பவருக்கும் நன்மை செய்யுங்கள்
கண்ணீருடன் விதைத்தால் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்யலாம்.