
அன்புள்ள அம்மா...
என் வயது, 14; பிரபல பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன். இந்திய ராணுவத்தில் சேருவதே என் நோக்கம். அதற்கு, 11ம் வகுப்பில் எந்த வகை பாடப் பிரிவு எடுத்து படிக்க வேண்டும். எந்த பாடத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இது பற்றி ஒன்றும் புரியவில்லை.
தற்போது தேசிய மாணவர் படையில், என்.சி.சி.,யில் சேர்ந்துள்ளேன். இதனால் ஏதாவது பலன் உண்டா... என் ராணுவக் கனவு நனவாக வேண்டும். தயவுசெய்து, என் குழப்பங்களுக்கு விடையளியுங்கள்.
இப்படிக்கு,
ஆ.ஹரிபிரியன்.
அன்பு மகனுக்கு...
நம் ராணுவத்தின் அரும் பெரும் பணிகளை தெரிந்து, உன் லட்சியத்தை வளர்த்திருப்பாய் என நம்புகிறேன்.
இந்திய ராணுவம்...
* எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அழிக்கிறது
* உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துகிறது
* பேரிடர் காலங்களில் நிவாரண பணி செய்கிறது.
ராணுவம் ஒரு நாட்டின் பெருமை; முன்னெச்சரிக்கையுடன் பக்க பலமாக இருக்கும். பிறநாடுகளில் போர் ஏற்பட்டால் அமைதிப்படை அமைத்து அந்த நாட்டு மக்களுக்கு பேருதவி செய்யும்.
ராணுவத்தின் விழுமியங்களாக விசுவாசம், கடமை, சுயநலமின்மை, தனிமனித வீரம், ஒருமைப்பாடு, மரியாதை, கவுரவம் போன்றவை உள்ளன.
நம் நாட்டு ராணுவத்தில், 12.5 லட்சம் வீரர்களும், கடற்படையில், 65 ஆயிரம் பேரும், விமானப்படையில், 14 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். நம் ராணுவ தளபதியின் பெயர் ஜெனரல் உபேந்திரா திவேதி. கடற்படை தலைவரின் பெயர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி. விமானப்படை தலைவர் ஏர்சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங்.
இவை தான் நம் ராணுவம் குறித்த அடிப்படை தகவல்கள்.
ராணுவத்தில் சேர்ந்தால், அன்னியநாட்டு பிரஜைகளை சட்டம், நீதி பயமின்றி சுட்டு தள்ளலாம் என்ற பொய் புனைவு சிலரின் மனதில் இருக்கும். அது தவறான செயல்பாடு. ராணுவம் என்பது நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்படுவதாகும். அதில் சேர்ந்து பணியாற்றும் எண்ணமே மிகவும் உத்வேகமானது. ராணுவத்தில் சேரும் வழிமுறைகள் பற்றி நான் கூறும் பதில் மற்ற இளைஞர்களுக்கும் உதவியாக இருக்கும்.
இந்தியாவில், 30க்கும் மேற்பட்ட சைனிக் ராணுவப் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர், அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது.
இப்பள்ளிகளில் சேர, 6, 9ம் வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடக்கும். ஒவ்வொரு பாடத்திலும் நுாற்றுக்கு, 25 மதிப்பெண் என்ற விதத்தில் கூட்டு சராசரியாக 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். சைனிக் பள்ளியில் படித்தோருக்கு ராணுவத்தில் சேர எந்த சலுகையும் கிடையாது. சைனிக் பள்ளி மாணவர்களுக்கு ராணுவத்தின் நன்னெறிகள் போதிக்கப்படுகிறது. என்.சி.சி.,யில் பெறும் பயிற்சிக்கு ராணுவத்தில் சேர போனஸ் மதிப்பெண், இட ஒதுக்கீடு உண்டு.
சரி... இனி ராணுவத்தில் சேர தேவையான கல்வி தகுதி குறித்து பார்ப்போம்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியலை முதன்மை பாடமாக படித்திருக்க வேண்டும். பாடங்களில், 50 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கப்பற்படை, விமானபடையில் சேர இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது, 27க்குள் இருக்க வேண்டும்.
குற்ற பின்னணி கூடாது. உயரம் ஆணுக்கு, 157.5 செ.மீ., பெண்ணுக்கு, 152 செ.மீ., இருக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உயரம் குறைப்பு சலுகை உண்டு. உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்றவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 'அக்னிவீர்' திட்டமும் தற்போது அமலில் உள்ளது. அக்னிவீரில் தோர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேருக்கு பணி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அக்னிவீரில் சேர விண்ணப்பங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொடுக்கப்படுகிறது. ராணுவத்தில் சேர போகும் உனக்கு ராயல் சல்யூட்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.