
அன்புள்ள அம்மா...
எனக்கு, 15 வயதாகிறது; பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி. ரத்ததானம் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
முக்கியமாக, ரத்ததானம் என் வயதுள்ளோர் செய்ய முடியுமா... ரத்ததானம் செய்தவரின் ரசனை, விருப்பு, வெறுப்பு, கல்வியறிவு போன்றவை தானம் பெற்றவருக்கு போய்விடும் என, என் தோழி ஒருத்தி கூறுகிறாள். இதில் உண்மை இருக்கிறதா...
குறிப்பிட்ட வகை குரூப் உள்ளவர் ரத்தம், அதே போல் ரத்த வகை உள்ளோருக்கு சேருமா... இது போன்று ரத்த தானம் வழங்குவதில் பல சந்தேகங்கள் இருகின்றன. இவற்றை தீர்த்து வையுங்கள்.
இப்படிக்கு,
என்.சி.சாமுண்டீஸ்வரி.
அன்பு செல்லத்துக்கு...
ஆரோக்கியமான உடலை உடையவர், தன்னிச்சையாக ரத்தத்தை பிறருக்கு கொடுப்பதே ரத்த தானம் எனப்படுகிறது. ஆண்டுக்கு, 12 கோடி பேர் உலகில் ரத்த தானம் செய்வதாக ஒரு புள்ளி விபரம் உள்ளது. விபத்து, அறுவை சிகிச்சை, நீண்டகால நோய் சிகிச்சைகளில் தானம் பெற்ற ரத்தம் பயன்படுத்தபடுகிறது. ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் சேரும் பாதிப்பு, ரத்தத்தில் சிவப்பணு அதிகரிக்கும் பரம்பரை பாதிப்புகளுக்கும் தானம் பெற்ற ரத்தம் பயன்படுகிறது.
நம் நாட்டு விதிப்படி உன் வயதுள்ள சிறுவர், சிறுமியர் ரத்ததானம் செய்ய முடியாது.
சில நாடுகளில் 16 வயது நிறைந்தவர் ரத்ததானம் செய்யலாம் என விதி உள்ளது.
இந்தியாவில் 18- முதல் 65 வயதுள்ளோர் ரத்த தானம் செய்யலாம்.
தானம் செய்ய விரும்புவோர்...
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, 12.5 இருக்க வேண்டும்
* உடல் எடையை, 45 கிலோவுக்கு அதிமாக பேண வேண்டும்
* ஒரு நிமிடத்துக்கு நாடித் துடிப்பு, 50- முதல் 100 வரை இருக்க வேண்டும்
* உடல் வெப்ப நிலை, 98.4 பாரன்ஹீட் உள்ளோர் மட்டுமே ரத்தம்தானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ரத்ததானம் செய்வோர், வெறிநாய் கடியாலோ, ஹெபடைடிஸ் - பி நோயாலோ பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது.
பெண்களில் கர்ப்பிணி, பிரசவமாகி ஆறு மாதம் நிரம்பாதோர், புற்று நோயால் பாதிக்கப்பட்டோர், கடும் ஆஸ்துமா நோய், இதய நோய், காக்காவலிப்பு பாதிப்புள்ளோர் ரத்ததானம் செய்ய தகுதியில்லை.
உன் தோழி சொன்னதாக நீ குறிப்பிடும் விஷயங்கள் எல்லாம் அறிவுக்கு ஒவ்வாத கருத்துகள். அவை புரட்டு மற்றும் கட்டுக்கதை வகையில் சேரும்.
ஒரு மனிதரின் ரத்தத்தில் அவரது குணதிசயம், ஆளுமை எல்லாம் கலந்திருப்பதில்லை.
ரத்தம், உடல் முழுக்க சத்துகளை சுமந்து செல்லும் கார்கோ படகு போன்றே செயல்படுகிறது.
ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஒ என, நான்கு வகைகள் உள்ளன.
இவற்றில், 'ஒ' வகை ரத்தம் உள்ளோர், எந்த ரத்தவகையை சேர்ந்தோருக்கும் தானம் கொடுக்கலாம்.
'ஏபி' ரத்த வகை உள்ளோர், எல்லா வகை ரத்தத்தையும் பெற்று கொள்ள முடியும்.
'ஏ' வகை ரத்துமுடையோர், 'ஏ' மற்றும் 'பி' மற்றும் 'ஏபி' வகையினருக்கு தானம் செய்யலாம்.
'பி' வகை ரத்தமுள்ளோர், 'பி' மற்றும், 'ஏபி' வகையினருக்கு தானம் செய்யலாம்.
வட அமெரிக்க நாடான கனடாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது ஆல்பெர்ட்டா. இங்கு வசிக்கும், 80 வயதுள்ள ஜோஸபின் மிச்சாலுாக் என்ற பெண் வாழ்நாளில், 203 யூனிட் அளவு ரத்தத்தை தானம் செய்து புகழ் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 88 வயது ஜேம்ஸ் ஹாரிசன் என்பவரின் ரத்த பிளாஸ்மாவில், அரியவகை ஆன்டிபாடி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர், 1173 முறை ரத்ததானம் செய்து பல குழந்தைகள் உயிரை காப்பாற்றியுள்ளார்.
ஒருமுறை தானம் செய்த பின், ரத்தம் மீண்டும் ஊற, 24 மணி நேரம் போதும். ஒரு ஆண், 12 வார இடைவெளியில் ரத்த தானம் செய்யலாம். பெண், ரத்த தானம் செய்ய, 16 வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில் மனிதர்களை காப்பாற்றுகிறது ரத்தம். அது, உலகின் சிவப்பு தங்கமாக கருதப்படுகிறது.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.