PUBLISHED ON : மே 17, 2025

பழங்காலத்தில் பயன்படுத்திய பொருட்களை, பொக்கிஷமாக பாதுகாப்பது உலகில் நடைமுறையாக உள்ளது. இவற்றை காட்சிப்படுத்தும் பகுதி அருங்காட்சியகம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 18, சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ்நகரில் லுாவ்ரே, இங்கிலாந்து, லண்டன் நகரில் பிரிட்டிஷ் மீயூசியம் போன்றவை உலக அளவில் புகழ்பெற்றுள்ளன. வித்தியாசமான அருங்காட்சியகங்களும் உலகம் முழுதும் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்...
கப் நுாடுல்ஸ் அருங்காட்சியகம்!
உலகில் கப் நுாடுல்ஸ் உணவு முதன்முதலில் தோன்றிய பகுதி ஒசாகா. கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது. இதற்காக, அருங்காட்சியகம் ஒன்று, அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விதவிதமான கப் நுாடுல்ஸ் உண்ண கிடைக்கும். அத்துடன், நுாடுல்ஸ் உணவின் வரலாற்று தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பிடித்தமான கப் நுாடுல்ஸ் உணவு வகைகளை தயாரித்து சுவைக்கவும் வசதி உண்டு. இங்கே, 800க்கும் மேற்பட்ட உணவு வகைகளை காணலாம்.
ஸ்பை அருங்காட்சியகம்!
அமெரிக்கா, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளது. உளவு மற்றும் நுண்ணறிவு தகவல் சேகரிப்பு பற்றிய விபரங்களை இங்கு பெறலாம். உலக அளவில் பாதுகாப்பிற்காக உளவுத்துறை ஆற்றியுள்ள பணிகளை அறியலாம். உளவு பார்ப்பதால் ஏற்படும் பயன்பாடுகள் பற்றியும் தகவல்கள் உள்ளன.
உளவு பார்க்க பயன்படுத்திய கருவிகள்பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்த்திராத, லிப்ஸ்டிக் பிஸ்டல், ஸ்பை கேமராக்கள் மற்றும் ைஹடெக் அம்சங்கள் உடைய ஸ்பை கார்கள், ரகசிய மைக்ரோபோன்கள் பொருத்திய காலணிகள், நாணயங்கள் போன்ற வினோத கருவிகள் காட்சியில் உள்ளன.
மாந்திரீகம், மேஜிக் அருங்காட்சியகம்!
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் அமைந்துள்ளது. மாந்திரீகத்தின் வரலாறு அதற்காக பயன்படுத்திய பொருட்கள் அது தொடர்பான நுால்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்டர் வாட்டர் அருங்காட்சியகம்!
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நீருக்கடியில் அமைந்துள்ளது. கண்ணாடி படகு, ஸ்கூபா டைவிங் வழியாக இதை சுற்றி பார்க்கலாம். இங்கு, 500க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நீருக்கடியில் அமைந்துள்ளதால் வித்தியாசமான அனுபவத்தை தரும். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கலைகளுக்கு இடையேயான தொடர்புகளை விளக்குவதாக அமைந்துள்ளது.
சித்திரவதை அருங்காட்சியகம்!
ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு வேதனை தரும் வகையில் தண்டனை வழங்குவதில் ஐரோப்பிய நாடுகள் முன்னோடி. அது தொடர்பான வரலாற்றை விவரிக்கும் வகையில் அருங்காட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு பயன்படுத்திய சாதனங்கள், வினோத கருவிகள் இங்கு உள்ளன.
கில்லட்டின், கட்டைவிரல் திருகுகள், இரும்பு கன்னி, மண்டையை நொறுக்கும் கருவி, கேத்தரின் வீல்ஸ் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சில பொருட்கள். குறைந்த வெளிச்சத்தில், வியத்தகு வடிவமைப்பில், பார்வையாளர்களை அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
நேச்சர் ஹிஸ்டரி அருங்காட்சியகம்!
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ளது. முழுக்க கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. புவியியல் மற்றும் வரலாறு தொடர்பான தொல்பொருட்கள் ஏராளமாக உள்ளன.
கழிப்பறை அருங்காட்சியகம்!
டில்லியில் அமைந்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள சுலப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உருவாக்கியுள்ளது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு, இன்று வரை கழிப்பறை அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்சிப்படுத்தியுள்ளது.
மண்பாண்டம் முதல் ராணி விக்டோரியா பயன்படுத்திய அரியணை வடிவிலான கழிப்பறை வரை பலவும் வைக்கப்பட்டுள்ளன. புத்தக அலமாரி வடிவிலான கழிப்பறையும் இங்கு காணலாம்.
- வி.பரணிதா