
அன்புள்ள அம்மா...
என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு, மூன்றரை வயதில் மகன் இருக்கிறான். சென்ற வருடம் அவனை, 'ப்ளே ஸ்கூல்' சேர்தோம். வகுப்பில் பெண் குழந்தைகளிடம் தான் அதிகம் பேசுகிறான்; அவர்களுடன் தான் விளையாடுகிறான்; உணவையும் பகிர்ந்து கொள்கிறான்.
என் பேச்சை கேட்பதை விட, இளம் வகுப்பாசிரியையின் அறிவுரையை தான் அதிகம் பின்பற்றுகிறான். விடுமுறை நாட்களில் வகுப்புத் தோழியர், பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்து விடுகின்றனர். அவர்களுடன் விளையாடுகிறான்.
என் மகனும், கணவரைப் போல, 'ஜொள்ளுபார்ட்டி' ஆகிவிடுவானோ என பயப்படுகிறேன். என்ன செய்து என் மகனை திருத்தலாம். நல்ல அறிவுரை கூறுங்கள்.
இப்படிக்கு,
எம்.தாட்சாயணி.
அன்பு மிக்க சகோதரிக்கு...
குழந்தைகளுக்கு எதிர்பாலின ஈர்ப்பு என்பது மரபியல் ரீதியானது.
'என்னடா மகனே! இந்த வயசிலே உனக்கு கேர்ள் பிரண்டு கேக்குதோ...'
'இவர் பெரிய குழலுாதும் கண்ணன்... இவரை சுற்றி கோபியர் மொய்க்கின்றனர்...'
'தேடி வர்ற பொண்ணு வீட்டுக்கு இப்பவே மருமகனா போய் விடு...'
'டீச்சர் இடுப்புல உக்காந்து ஊட்டி விடுற சோறை சாப்பிடு...'
இது போன்ற வசனங்களை உதிர்த்து உன் மகனை கேலி செய்வதை முதலில் நிறுத்தவும்.
பெற்ற அம்மாவின் பேச்சை கேளாது செல்லம் கொண்டாடுகிறான் உன் மகன்.
பள்ளியாசிரியை தேவ மேய்ப்பனின் குறியீடு. கண்டிக்கவும், தண்டிக்கவும், கட்டுபடுத்தவும், நேர்வழிபடுத்தவும் அவருக்கு முழுஉரிமை இருக்கிறது. வகுப்பில், 20 மாணவ, மாணவியர் குழுவாய் ஒரு ஆசிரியைக்கு கட்டுப்படும் போது... உன் மகனும் அனிச்சையாய் கட்டுப்படத்தான் செய்வான்.
செல்லத்துக்கு நீ... கண்டிப்புக்கு வகுப்பாசிரியை...
உன் மகனிடம் சில அறிவுரைகள் சொல்லலாம்...
'மகனே! வகுப்பில் உடன் படிக்கும் அனைவரும் சமமானவர்கள். ஒரு மனிதரின் இடது, வலது கை கட்டைவிரல் போன்றோர் நீங்கள். உனக்கு இந்த உலகத்தில் வாழ என்ன உரிமை இருக்கிறதோ, அதே அனைவருக்கும் இருக்கிறது. உணவையும், விளையாட்டுப் பொருளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்...
'வகுப்பில் தோழியருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தோழர்களுக்கும் கொடு. உன்னை விட வயதில் மூத்த தோழியரை அக்காவாகவும், வயதில் இளைய தோழியரை தங்கையாகவும் பாவிக்கலாம். அம்மா, ஆசிரியை, அக்கா, தங்கை, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என பெண்கள் சார்ந்த உறவுமுறைகளை பெருமையாக எண்ணி கண்ணியப்படுத்து...'
இவ்வாறு அறிவுரை பேசியபடி பிடித்த உணவை கொடுக்கவும்.
மகன் முன், கண்ணியமான பெற்றோராக நீயும் உன் கணவரும் நடந்து கொள்ளுங்கள். உன் மகனை கேலி செய்வதாக எண்ணி மனதில் விகற்பத்தை விதைத்து விடாதீர். ஆண்- - பெண் உறவு சார்ந்த கல்வியை உன் மகனுக்கு 'ஸ்பூன் பீடிங்' செய்...
'நீ பேசும் வார்த்தைகள் எல்லாம் உன் மகனுக்கு புரியுமா என கவலைப்படாதே. முதல் தடவை, 20 சதவீதம் புரியும். அடுத்த தடவை, 30 சதவீதம் புரியும். 100 சதவீதம் புரிய ஆறேழு வருடங்கள் ஆகலாம். நோ ப்ராப்ளம். எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதை மனதில் வை.
உன் மகனின் வகுப்பு தோழர், தோழியர் மற்றும் வகுப்பாசிரியை அனைவரையும் வீட்டுக்கு வரவழைந்து சிற்றுண்டி கொடுத்து உபசரிக்கவும். உன்னிடம் இல்லாத நற்குணத்தை உன் மகனின் வகுப்பாசிரியையிடம் கண்டால் அதை நீயும் வளர்த்துக்கொள். வகுப்பு தோழர், தோழியர் உன் மகனிடம் பழகும் விதத்தையும், உன் மகன் அவர்களிடம் பழகும் விதத்தையும் கண்கூடாய் பார்த்து தெளிவடையவும்.
பெண்மைக்குள் ஆண்மை அடக்கம்; பெண்மையை போற்றாத சமூகம் உருப்படாது என்பதை உன் மகன் உளமார உணர்த்து கொள்வான்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.