
அன்புள்ள அம்மா...
என் வயது, 40; தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண். எனக்கு, 10 வயதில் மகளும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். மகன் மிகவும் வால் பையன். படுக்கையில், சோபாவில், சுவர்களில், சமையற்கட்டில், மரச்சாமான்களில் கண்டபடி கிறுக்கி தள்ளுகிறான்.
கண்டித்தால் தரையில் குப்புறவிழுந்து கை, கால்களை உதறியபடி கதறி அழுகிறான். சமீபத்தில் தான், 1 லட்சம் ரூபாய் செலவு செய்து வீடு முழுக்க வர்ணம் பூசினோம். மீண்டும் வேலையை காட்ட துவங்கிவிட்டான். என்ன செய்தால் மகனின் கிறுக்கல்களை தடுத்து நிறுத்தலாம். தகுந்த ஆலோசனை சொல்லுங்கள்.
இப்படிக்கு,
ஆர்.மேக்தலின்.
அ ன்பு சகோதரிக்கு,
குழந்தைகளின் கிறுக்கல்களை ஆங்கிலத்தில், 'டூடூலிங்' என்பர். சுவரில் வரையும் கிறுக்கல்கள், குழந்தைகளை இயற்கையாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். சுற்றுப்புறத்தில் தேடல்களை உருவாக்கி வாழ்வை அர்த்தபடுத்தும். அப்பழுக்கற்ற உணர்வுகளை வெளிபடுத்தும். நுண்ணிய வகையில் இயக்கும் திறன்களையும், படைப்பாற்றலையும் வளர்க்கும்.
குழந்தைகள் பிறவி படைப்பாளிகள். அவர்களின் படைப்பாற்றல் முழுமையாக வளர்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அதனால் கிறுக்க தேவையான உபகரணங்களை வாரி வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை.
குழந்தைகள் குறுகுறுப்புடன் சுற்றுபுறத்தை ஆராய்கின்றனர். வீட்டில் செங்குத்தான சுவர் அவர்களுக்கு வரையும் திரைச்சீலை ஆகிறது. கிறுக்கல்கள் கை, கண் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது. பின்னாளில் படைப்பாற்றலுடன் எழுதுவதற்கான ஆர்வத்தையும் வழங்குகிறது. கிறுக்கல்கள் வழியாக குழந்தைகள் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் துளி கூட குறையாமல் வெளிபடுத்துகின்றனர் .
கிறுக்கல்களால் தோள்பட்டை, மேல்கை மற்றும் விரல்கள் பலம் பெறுகின்றன. குழந்தைகள் சாக்பீஸை, கிராயானை தொடும்போது திருப்திகரமான அனுபவங்களை பெறுகின்றனர்.
கிறுக்கலில் ஈடுபடும் குழந்தைகள், பிற்காலத்தில் சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொள்கின்றனர்.
கண்டபடி கிறுக்கும் குழந்தையை மடைமாற்ற சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
அவற்றில் சில...
* வெள்ளை போர்டு அல்லது கண்ணாடி போர்டுகளை அறைச் சுவர்களில் இணைக்கலாம்
* குழந்தை கிறுக்கும் சுவர்களில் வாஷபிள் பெயின்ட் பூசலாம்
* கிறுக்கல்களுக்கு உரிய கால அவகாசம் ஒதுக்கலாம். அதை மதித்தால் பாராட்டலாம்
* குழந்தை கிறுக்கலில் அதிக கறுப்பு நிறம் பயன்படுத்தினால் பதட்டத்தில் இருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை கிறுக்குவதை எல்லாம் ஒளிப்படமாக எடுத்து வைத்து கொள். பெரியவன் ஆனவுடன் அதை காட்டி மகிழலாம்.
ஒரு தாயை பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த ஓவியம் பிள்ளையின் கிறுக்கல்கள் தான். கிறுக்கல்களை ரசித்து மகிழ பழகிக்கொள். கிறுக்கல்களை ஒழுங்குபடுத்தவும். ஒரு கேன்வாசில் அவன் மனதில் உள்ளதை குவித்து வரையக் கற்றுக்கொள்ளட்டும். ஜுனியர் பிக்காஸோவின் அம்மாவுக்கு வாழ்த்துகள்!
- -அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

