
அன்புள்ள அம்மா...
என் வயது, 40; இல்லத்தரசியாக இருக்கிறேன். என் மகனுக்கு வயது 15 ஆகிறது. 10ம் வகுப்பு படிக்கிறான்.
அவனுக்கு...
* கிரிக்கெட் விளையாடுவதில் கிறுக்கு
* பாட்டு கேட்பதில் கிறுக்கு * வளர்ப்பு பிராணி மீது கிறுக்கு என தொடர்கிறது.
இப்போது பட்டங்கள் விடுவதில் கிறுக்காக இருக்கிறான். நண்பர்களோடு சேர்ந்து வண்ணமயமான பட்டங்கள் தயாரிக்கிறான். இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து வீட்டருகே பட்டம் விடுகிறான். எதிரியின் பட்டத்தை அறுத்து வீழ்த்துகிறான். அறுத்த பட்டங்களை மரமேறி கைப்பற்றுகிறான்.
பட்டம் பறக்க விடுவதை ஒரு விளையாட்டில் சேர்க்க முடியுமா...
பட்டம் பறக்க விடும் கிறுக்கில் இருந்து என் மகனை எப்படி விடுவிப்பது...
தயவு செய்து விளக்கமாக பதில் தரவும்.
இப்படிக்கு,
என்.மகுடேஸ்வரி.
அன்பு சகோதரிக்கு,
பழங்காலத்தில் கி.மு., 9000ல் மீசோலித்திக் குகை ஓவியங்களில், பட்டம் விடுதல் பற்றிய காட்சிகள் காணப்படுகின்றன. கி.பி., 600ல் ஆசிய நாடான சீனாவில் பட்டம் பறக்கவிடும் பழக்கம் இருந்ததாக வரலாற்றில் குறிப்பு உள்ளது. சீனாவில் இங்மிங் மற்றும் இலையுதிர் கால திருவிழாக்களிலும் பட்டம் பறக்கவிடுவது நடைமுறையாக இருந்திருக்கிறது.
பட்டத்துடன் தெர்மோ மீட்டரை இணைத்து காற்றின் தட்பவெப்பத்தை அளக்க பயன்படுத்தியுள்ளார் விஞ்ஞானி அலெக்சாண்டர் வில்சன்.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இந்த சோதனை நடந்தது.
மின்னலை ஆராய, கி.பி., 1752ல் பட்டங்களை பயன்படுத்தி இருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின்.
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள், பட்டங்களை வானுார்தி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கின்றனர்.
அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா, 1950ல் விண்வெளி ஆராய்ச்சிக்கு பட்டத்தை உபயோகப்படுத்தி இருக்கிறது.
பட்டம் ராணுவ சமிக்ஞைக்காகவும் வானிலையை நுண்ணோக்கவும் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில், கலாசார வடிவமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.
பறக்கவிடும் பட்டங்கள் சுதந்திரம், ஆரோக்கியம், நீடித்து நிற்கும் தன்மைக்கான உருவங்களாக உள்ளன.
வானில், 11 ஆயிரத்து 284 அடி உயரம் வரை பட்டம் பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அளவில் பட்டங்களில் மிகச்சிறியது, 5 மி.மீ., அளவிலானது. மிகப்பெரிய பட்டம் 55.33 அடி நீள, அகலத்தில் இருந்ததாக பதிவாகியுள்ளது.
அண்டை நாடான சீனாவில் உலகின் முதல் பட்டம் உருவானதாக தொல்லியல் சான்று வழி தெரியவந்துள்ளது. இங்கு மொஹிசியம் என்ற தத்துவத்தை உருவாக்கிய அறிஞர் மொஹி கி.மு.468ல் பட்டம் பறக்கவிட்டதாக வரலாற்று குறிப்பு உள்ளது.
டெல்டா காத்தாடி, பெட்டி காத்தாடி, பல்வர்ண, 14 இஞ்ச் வால் காத்தாடி, பனிசறுக்கு காத்தாடி, சண்டை காத்தாடி, வைர காத்தாடி, வில் காத்தாடி, தட்டை காத்தாடி, இழுவை காத்தாடி, ரொக்காடு காத்தாடி, கலப்பு பட்டம், பாம்பு பட்டம் போன்ற வகைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் துவங்கி, மூன்று மாதங்கள் பட்டம் விட ஏற்ற காலம்.
காற்றின் வேகம் மணிக்கு, 18 கி.மீ., வரை இருத்தல் பட்டம் பறத்தலுக்கு உகந்தது. எல்.இ.டி., விளக்கு பொருத்திய பேட்டரி பட்டங்களை இரவிலும் பறக்கவிடலாம்.
பறவை பார்வையில் ஒளிப்படம் எடுக்க, போக்குவரத்தை கண்காணிக்க, விளம்பரத்துக்காக, கேளிக்கை நிகழ்வுக்காக, விளையாட்டு செயலுக்காக பட்டம் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில், 'கைட்' என்ற சொல், பறவையினமான கழுகை குறிக்கும். இது உலகின் பல பகுதிகளில் உள்ளது.
இந்தியாவின் மேற்கு பகுதியில் பட்டம் விடும் திருவிழாவை உத்திராயன் என்பர். தெற்கு பகுதியில் பட்டம் விடும் திருவிழாவை, மகர சங்கராந்தி என்பர். வண்ணமயமாக உள்ள பட்டங்கள் பிளிப்கார்ட் இணைய சந்தையில், வித விதமாக கிடைக்கின்றன.
உன் மகன் விடும் பட்டத்துக்கு பயன்படும் நுாலில் மனிதர்களின் கழுத்தை அறுக்கும் கண்ணாடி துாளான 'மாஞ்சா' தடவி இருக்கிறதா என்பதை பார். அது மிகவும் ஆபத்தானது. பட்டம் விடும்போது அவனுக்கும், பிறருக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. பட்டம் விடும் கிறுக்கு, சிறுவர்களிடம் கொஞ்சநாள் தான் இருக்கும். பின்னர் அதுவும் கடந்து போகும் சகோதரி.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

