
அன்புள்ள அம்மா..
என் வயது, 27; தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண். என் கணவரும் பணிக்கு செல்கிறார். எங்களுக்கு, 2 வயதில் மகள் இருக்கிறாள். உணவு சாப்பிட்ட பின் அவள் வாயை கொப்பளிக்க வைத்து விடுகிறேன். ஆனால் பல் துலக்கும் பழக்கத்தை இன்னும் சொல்லித் தரவில்லை.
பற்கள் பார்க்க நன்றாக தான் உள்ளன. சொத்தையோ, துர்நாற்றமோ இல்லை. எந்த வயதிலிருந்து என் மகளுக்கு பல் துலக்கச் சொல்லிக் கொடுக்கலாம்.
-இப்படிக்கு,
இன்னிசை பண்.
அன்பு சகோதரிக்கு,
நன்றாக படிப்பறிவு இருந்தும் கணவரும், மனைவியும் அறியாமையில் உழல்கிறீர்.
குழந்தைகள் முதல் பல் முளைத்த ஆறு மாதத்தில் இருந்தே பல் துலக்கி விடலாம்.
குழந்தைக்கு பல் முளைக்காத போது மேல்தாடை, கீழ்தாடை ஈறுகளை, மென்மையான துணியால் துடைத்தெடுக்கலாம்.
குழந்தை பல் துலக்கலில் மூன்று விதிகள் உள்ளன. அவை...
* தினம் மூன்று முறை பல் துலக்கல்
* உணவு சாப்பிட்ட மூன்று நிமிடங்களுக்கு பின் பல் துலக்கல்
* ஒவ்வொரு முறையும் பல்துலக்க இரண்டு நிமிடங்கள் எடுக்க வேண்டும்.
குழந்தைகளை பல்துலக்க வைப்பதில் சில சிறப்பு அம்சங்களை கடைபிடிப்பது நல்லது.
பொம்மைகள் வரையபட்ட பல்துலக்கி மற்றும் வண்ணயமான பற்பசைகளை தேர்ந்தெடுக்கலாம்.
முதலில் பல்துலக்கும் போது, 30 நொடிகள்; அடுத்து துலக்கும் போது, 60 நொடிகள் என, இரண்டு நிமிடங்கள் வரை நீட்டிக்கொண்டே போகலாம்.
தானே பல்துலக்க ஆசைப்படும் குழந்தையை அதன் ஆசைப்படி விட்டுவிட வேண்டும். குழந்தை பல்துலக்கும் பொழுது பெற்றோரும் சேர்ந்து கொள்ளலாம்.
பல்துலக்கும் இடமான குளியலறையில் குழந்தைக்கு பிடித்த பாடலை ஒலிக்க விடலாம்.
பல்துலக்கும் முன், குழந்தை சாப்பிட்ட உணவுப்பொருட்களை வரிசையாக ஒப்பிக்கலாம்.
அந்த உணவில் உள்ள துகள்கள் அகலவே பல்துலக்குகிறோம் என விளக்கலாம்.
பல்துலக்கும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்த...
* பொம்மைக்கு பல்துலக்கி காட்டலாம்
* இடதுகையில் பொம்மையை ஏந்தி, வலது கையில் பல்துலக்கி விடலாம்
* சிறப்பான பல்துலக்கலை மனம் விட்டு பாராட்ட வேண்டும்
* தொடர்ச்சியாக பல்துலக்குவதை கடைபிடிக்க வைக்க வேண்டும்
* பல்துலக்குதலின் முக்கியத்துவத்தை சுவாரசியம் குன்றாமல் குழந்தைக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
பல்துலக்கி முடிந்த பின், பற்பசையை விழுங்க விடக்கூடாது. வாய் கொப்பளிக்கவும் கூடாது. பதிலாக, துலக்கிய பற்பசையை வெளியே துப்ப சொல்லிக் கொடுக்கவும்.
பல்துலக்கிய பின் வாய்க்குள் நறுமணமும் புத்துணர்ச்சியும் தவழ்வதை குழந்தையிடமே கேட்டு உறுதி செய்யவும். இவ்வாறு செய்வதால், அந்த பழக்கத்தை விடாமல் கடைபிடித்து பற்களை சுத்தமாக பேண குழந்தை தொடர்ந்து செயல்படும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

