
மயிலாடுதுறை தேசிய துவக்கப் பள்ளியில், 1985ல், 5ம் வகுப்பில் படித்தபோது, வகுப்பாசிரியையாக இருந்தார் கிருஷ்ணவேணி. பாடங்களை சிறப்புடன் நடத்துவார். கண்டிப்பால் புகழ் பெற்றவர். சுமாராக படிப்போரையும் சிறப்பு பயிற்சிகள் தந்து சூப்பராக்கிவிடுவார். இவரது வகுப்புக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
அன்று தெளிவான கையெழுத்து போட்டிக்கான அறிவிப்பு வந்தது. அதில் பங்கேற்க என்னை பரிந்துரைத்தார். மறுத்தபோது கோபம் கொண்டு, 'ஒவ்வொரு வாய்ப்பும், திறமையை வெளிப்படுத்தும் திறவுகோலாக இருக்கும். எதையும் நழுவ விடாதே...' என அறிவுரை கூறி நம்பிக்கை ஏற்படுத்தினார் ஆசிரியை.
அதை மனதில் பதித்து செயல்பட்டேன். அடுத்து, 6ம் வகுப்பு ஆங்கிலம் வழியில் பயில நுழைவுத்தேர்வு எழுதினேன். அதில் வெற்றி கிடைத்தது. தொடர்ந்து, வாய்ப்புகளை நழுவ விடாமல் உழைத்து உயர்வுகளை பெற்றுவருகிறேன்.
என் வயது, 49; பத்திரிகைகளுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணியின் வழிகாட்டுதலை பின்பற்றி கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் செயல்பட்டு வருகிறேன். வாழ்வின் உயர்வுக்கு அடித்தளமிட்டவரை போற்றுகிறேன்.
- ஜெயஸ்ரீ எம்.சாரி, சென்னை. தொடர்புக்கு: 94059 03763

