தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ் (346)

இளஸ் மனஸ் (346)

இளஸ் மனஸ் (346)


PUBLISHED ON : மார் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆன்ட்டி,

எங்க வீட்டில் நான், அம்மா, அப்பா என, மூன்று பேர் தான். வீட்டில், பூஜை அறை தனியாக கிடையாது. சாப்பாட்டு அறையில் தான், அனைத்து சாமி படங்களையும் வைத்துள்ளோம்.

சாப்பிட்டு கை கழுவும், 'வாஷ் பேஸின்' சாப்பாட்டு மேஜை அருகில் உள்ளது. அப்பா தினமும் அந்த வாஷ்பேஸினில் கை கழுவி, வாய் கொப்பளிப்பார். அதற்காக தினமும் அப்பாவிடம் சண்டை போடுவார், அம்மா.

'கை மட்டும் கழுவுங்கள்; வாய் கொப்பளிப்பதானால் குளியலறைக்கு போய் கொப்பளியுங்கள். இங்கு சாமி படங்கள் எல்லாம் இருக்கிறது...' என்பார், அம்மா.

ஆனால், தினமும் அப்பா மறந்து போய் வாய் கொப்பளிப்பார். அப்பாவை கோபித்து கொள்வார், அம்மா. இருவருக்கும் சண்டை வரும்.

அப்பா மாதிரியே, நானும் தினமும் அதே வாஷ்பேஸினில் தான் வாய் கழுவுகிறேன். அம்மா ஒன்றும் சொல்வதில்லை.

'உன் பிள்ளையும் தானே வாஷ்பேஸினில் கொப்பளிக்கிறான். அவனை ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாயே...' என்பார், அப்பா.

அது ஏன் ஆன்ட்டி... அப்பாவை திட்டும் அம்மா, என்னை மட்டும் ஒன்றும் சொல்வதில்லை...

- இப்படிக்கு,

மணிகண்டன்.



அன்பு மணிகண்டன்,

உன் வீட்டில் மட்டுமல்ல... எல்லா வீட்டிலும் அன்னையருக்கு, கட்டிய கணவனை விட, பெற்ற பிள்ளைகள் ஒரு படி மேல் தான்.

கணவனால் பெறப்பட்ட பிள்ளை ஆனாலும், பிள்ளை மீது தான் பாசம் அதிகம். கணவனுக்கு செய்வதை விட, பிள்ளைக்கு அதிகம் செய்வர். கேட்டால், 'அவன் சின்னப் பையன். அவனை மாதிரி மூன்று மடங்கு வயசாகுது அவருக்கு...' என்பர்.

எத்தனை வயதானாலும், மனித மனம் அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கும். பெற்ற தாயிடமும், கட்டிய மனைவியிடமும் அதிகம் எதிர் பார்க்கும். உன் அப்பாவும் அப்படித்தான் .

ஒரு விஷயத்திற்கு தன்னிடம் கோபித்து, கண்டிப்பு காட்டும் மனைவி, அதே விஷயத்தை மகன் செய்யும் போது கண்டிக்காமலும், கோபப்படாமலும் இருப்பது, உன் தந்தையின் மனதை நோகடிக்கத் தான் செய்யும். உள்ளுக்குள் அவர் மிகவும் வருத்தமும், வேதனையும் படுவார்.

இதை, உன் தாய் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உன் தாயிடம் சொல்லி சாப்பாட்டு அறையை விட்டு, அந்த வாஷ்பேஸினை அகற்ற சொல் அல்லது சாமி படங்களையாவது வேறு அறைக்கு மாற்ற வை.

இவை இரண்டையும் விட, நீயும் குளியலறையை பயன்படுத்துவதே மிகச் சிறந்த தீர்வாகும். உன்னை கவனிக்கும் உன் அப்பாவும், தானாகவே குளியலறையில் உன்னை போலவே கை கழுவி, வாய் கொப்பளிக்கப் போவார்.

தீர்வு உன்னிடமே இருக்கிறதே...

அடுத்தவர்களை பார்க்கும் நாம், நம்மை நாமே பார்த்துக் கொள்ளத் தவறி விடுகிறோம். நம் தவறுகளை, குற்றங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள ஆரம்பித்தால், வாழ்க்கையின் நிறைய பிரச்னைகள் தீர்ந்து போகும்; மனதிற்குள் அமைதியும், நிம்மதியும் வந்து சேரும்.

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us