தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிலேடை பேச்சு!

சிலேடை பேச்சு!

சிலேடை பேச்சு!


PUBLISHED ON : மார் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம், சி.எஸ்.ஐ., பள்ளியில், 1967ல், 8ம் வகுப்பு படித்தேன். அப்போது என் வகுப்பு ஆசிரியராக இருந்தவர், வேதமாணிக்கம். வகுப்பறையில் நான் புத்தகத்தை வாசிக்கும் போது ஏற்ற இறக்கம், தலையை ஆட்டுதல், வாக்கியத்துக்கு ஏற்ப கையை உயர்த்துதல் போன்ற அபிநயங்களை கண்டு, என் மீது அவருக்கு தனி கவனம் ஏற்பட்டது.

'என்சைக்ளோபீடியா' என்ற வார்த்தையை உச்சரிக்க, நான் சிரமப்பட்டேன். 'என் சைக்கிளைப் புடிய்யா' என, சொல்லிப்பார்; தானாக வரும்...' என்றார், அவர். அதே போல, எளிதாக அந்த வார்த்தை வசப்பட்டது.

வகுப்பில், என் பையில் கொய்யா பழம் வைத்திருந்தேன். அதை கவனித்து விசாரித்தார். 'பள்ளி மரத்தில் பறித்த கொய்யாபழம், சார்...' என்றேன். 'அது, கொய்யா பழம் ஆயிற்றே... ஏன் கொய்தாய்...' என, 'கமென்ட்' அடித்தார்.

இவ்வாறாக சிலேடை சுவையோடு அவர் அடுத்தடுத்து பேச, அதுவே என் மனதில் விதையாய் விழுந்து, விருட்சமாய் வளர்ந்தது.

'சமூகசேவை மாணவர் பிரிவு' பொறுப்பாளராகவும் அவர் இருந்தார். அந்த பிரிவில் என்னை, மாணவர் செயலர் ஆக்கினார். பள்ளிக்கு இலவசமாக வந்த பால் பவுடர் பாக்கெட்களை, தினமும் என்னிடம் கொடுப்பார். பள்ளி உணவக அறையில், பால் காய்ச்சுவேன். ஏழை மாணவர்கள் வந்து குடிப்பர். இவ்வாறாக, சமூக நல சிந்தனையையும் ஊட்டினார்.

என் தந்தை வனத்துறை அதிகாரியாக இருந்தார். விடுமுறையில், அவருடன் காட்டிற்கு சென்று ஒரு வாரம் வசித்தேன். அந்த அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள அழைத்தார், ஆசிரியர். அவரது பாணியை பின்பற்றி, சிலேடை சுவையோடு என் பயண அனுபவங்கள் குறித்து பேசினேன். அப்போது அவர் உற்சாகப்படுத்தி, 'இந்த பேச்சு, உனக்கு சோறு போடும்...' என்றார். மேடை பேச்சு கலையில், என்னை செதுக்கினார்.

தற்போது, என் வயது, 71. 'தினமலர்' நாளிதழில், தலைமை நிருபராக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். பள்ளி பயிற்சியில் மேடைப்பேச்சு எனக்கு வசப்பட்டது. என் உணர்விலேயே சமூகசேவை சேர்ந்தது. இதற்கு, காரணமான வகுப்பாசிரியர் வேதமாணிக்கத்திற்கு என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

- ஆர்.நுாருல்லா, சென்னை. தொடர்புக்கு: 96555 78786

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us