PUBLISHED ON : மார் 28, 2026

கோவை, ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 8ம் வகுப்பு படித்தேன். எனக்கும், என் சகமாணவனுக்கும், சிகரெட் பிடிக்க ஆசை வந்தது. பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரமாக அமர்ந்து, புகைத்தோம்.
பள்ளியின் கூட்டுறவு பண்டக சாலையின் பொறுப்பாளரும், எங்கள் குடும்ப நண்பருமான ஆசிரியர் சுப்பிரமணியம், எங்கள் பின் வந்து நின்றதை நாங்கள் கவனிக்கவில்லை. அவரிடம் பிடிபட்டோம். ஸ்டோர் ரூமில் கொஞ்சம் வேலை இருப்பதாக எங்களை அழைத்து சென்று, நோட்டுகளை அடுக்குமாறு கூறினார்.
திடீரென பிரம்புடன் வந்தவர், எங்கள் இருவரையும் வெளுத்து வாங்கினார். அன்று, சிகரெட்டுக்கும், எனக்கும் உள்ள உறவு, 'பிரேக் அப்' ஆனது. என் தீயொழுக்கத்திற்கு தீ வைத்து சாம்பலாக்கினார்.
அன்று அவர், என்னை கண்டு கொள்ளாமல் போயிருந்தால், இன்னும் மோசமான காரியங்களை செய்ய துணிந்து இருப்பேன். தற்போது, என் வயது, 59. எந்த தீய பழக்கமும் இல்லாமல் வாழ்கிறேன். பள்ளி பருவத்தில், எங்களை அடித்து திருத்தியதால், என்னை மேம்படுத்த முடிந்தது. என் ஒழுக்கமான வாழ்க்கையை, ஆசிரியர் சுப்பிரமணியத்திற்கு காணிக்கையாக்குகிறேன்.
- செ.ரமேஷ்குமார், கோவை. தொடர்புக்கு: 98653 01965
