PUBLISHED ON : மார் 28, 2026

அன்பு சகோதரி இந்துமதி,
என் மகன், 8ம் வகுப்பு படிக்கிறான். மிகவும் நல்ல பையன். அமைதியானவன்; வகுப்பில் முதலாவதாக வருபவன். ஆனால், அவனிடம் விரும்பத்தகாத பழக்கம் ஒன்று உள்ளது.
அவன், எல்.கே.ஜி., படித்து கொண்டிருந்த போது ஆரம்பித்தது, அந்த பழக்கம்.
பக்கத்துப் பையனின் பையில் இருந்து, 'வாட்டர் கலர்' பெட்டியை அவன் அறியாமல் எடுத்து, தன் பையில் வைத்து, வீட்டிற்கு வந்து விட்டான்.
'ஏதுடா, இந்த பெயின்டிங் பாக்ஸ்...' என்று கேட்ட போது, 'பள்ளியில் கிடைத்தது...' என்றான்.
'அதை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டியது தானே... ஏன் வீட்டிற்கு எடுத்து வந்தாய்...' என்று கேட்டேன்.
'திருப்பி எடுத்து போய் தந்து விடுகிறேன்...' என்றான்.
'தந்து விட்டாயா...' என்று, இரண்டு நாட்களுக்கு பின் கேட்ட போது, 'ஆமாம்' என்று தலையாட்டினான்.
சில நாட்களுக்கு பின், அவனது அலமாரியை ஏதேச்சையாக திறந்து பார்த்த போது, அந்த பெயின்டிங் பாக்ஸ் உள்ளே இருந்தது.
என்னுடன் கடைக்கு வரும் போதெல்லாம், சின்னச் சின்னதாக ஏதாவது ஒரு பொருளை கடைக்காரருக்கும், எனக்கும் கூடத் தெரியாமல் எடுத்து வந்து விடுவான். அவன் எடுக்கும் பொருட்களால் அவனுக்கு எந்த பயனும் இருக்காது; உபயோகப்படுத்தவும் மாட்டான்.
எதனால் அப்படி செய்கிறான் என்பது தெரியவில்லை. நயமாய் சொல்லி, திட்டி கூடப் பார்த்து விட்டேன். ஆனாலும், அவன் மாறவில்லை. இப்படியே போனால் பெரிய திருடனாகி விடுவானோ என்று பயமாக இருக்கிறது, சகோதரி.
- இப்படிக்கு,
பவதாரிணி.
அன்பு தங்கை பவதாரிணி,
நீ நினைப்பது போல், உன் மகன் பெரிய திருடனாக மாற மாட்டான். அந்த பயமும், கவலையும் உனக்கு வேண்டாம். ஆனால், இது கவலைபடக் கூடாத விஷயமும் அல்ல.
இது, ஒரு விதமான மனநோய். இதற்கு, 'க்ளெப்டோமேனியா' என்று பெயர். இது, மனநல குறைபாடு காரணமாகவே ஏற்படுகிறது.
தங்களுக்கு தேவையற்ற, வேண்டாத பொருளானாலும் அதைப் பார்த்தவுடன், 'யாரும் அறியாமல் அதை எடுத்துக் கொள்' என்று, அடக்க முடியாத ஆழ் மன கட்டளையின் காரணமாகவே, இதை செய்கிறான்.
அதைக் கொண்டு பொருளாதார மேம்பாடு ஏதாவது ஏற்படப் போகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. தாங்கள் செய்வது தவறு என்பதை, அவர்களும் உணர்ந்தே இருக்கின்றனர்.
உள் மனது, 'எடு, எடு' என்கிற போது எடுக்காவிட்டால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவர். எடுத்த பின், 'அப்பாடா' என்ற நிம்மதி ஏற்படும்.
உங்கள் மகன் மட்டுமல்ல, நிறைய பேருக்கு இந்நோய் இருக்கிறது.
விழாக்களுக்கு போகிற பெரிய இடத்து பெண்களும், பையன்களும் முள்கரண்டி, ஸ்பூன் என, சின்னச் சின்னப் பொருட்களை, 'பேன்ட் பாக்கெட்'டிலும், கைப் பையிலும் போட்டு வந்து விடுவர். அவர்கள் வருவதும், போவதும் விலை உயர்ந்த கார்களாக இருக்கும்.
வெளிநாடு சென்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவர், 'மால்' ஒன்றில், 'சாக்ஸ்' எனப்படும் காலுறையை, யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்து மாட்டிக் கொண்டது, அப்போது செய்தியாயிற்று.
எடுக்கும் உந்துதலில் எடுத்து விட்டு, அந்த நேரத்திற்கு ஒருவிதமான விடுதலை உணர்வு பெற்றாலும், அதற்கு பின் அவர்களுக்குள் குற்ற உணர்வு ஏற்படும். தங்கள் செய்கையை நினைத்து அவமானப்படவும் செய்வர்.
அவர்கள் மீது கோபப்படவோ, வெறுக்கவோ, இகழவோ கூடாது. இது, ஒரு வகை மனநோய்; மனப்பிறழ்வு என்பதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ வேண்டும்.
தவறு என்பது தெரிந்தும், தடுத்துக் கொள்ள இயலாத நிலையில் அவர்கள் இருப்பதால், அவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை.
ஆகவே, பவதாரிணி... உன் மகனிடம் அன்பாக, பிரியமாக நடந்து கொள். அவனை, சிறந்த மனநல மருத்துவரிடம் அழைத்து போ. இதற்கு தெரபி தேவைப்படும். சிலருக்கு மருந்து, மாத்திரைகளும் கூட வேண்டியிருக்கும்.
மற்ற நோய்களுக்கு மருத்துவரிடம் செல்ல தயங்குவதில்லை. அது போலத் தான் மனநல பிரச்னைகளுக்கு, 'சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மருத்துவர்களிடம் செல்ல வேண்டியது அவசியம்.
இந்த புரிதல் அனைவருக்கும் வந்து விட்டால், 'மனநல மருத்துவர்' என்றால், 'பைத்தியக்கார டாக்டர்' என்ற எண்ணமோ, பயமோ வராது.
- அன்புடன், இந்துமதி.
