தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!

இளஸ் மனஸ்!


PUBLISHED ON : மே 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்துமதி ஆன்ட்டி,

நான், 5ம் வகுப்பு படிக்கிறேன். எங்களின் குடும்பம், அன்பே உருவானது. அம்மா, அப்பா, அண்ணன், நான் என சந்தோஷமாக இருந்தோம். விடுமுறை நாட்களை, வெளியூர்களுக்கு போய் கொண்டாடுவது வழக்கம்.

அப்படி ஒரு முறை, விடுமுறைக்கு நாங்கள் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு, கடலில் தவறி விழுந்த என் அண்ணன், அலைகளால் அடித்து செல்லப்பட்டான். மீனவர்களும், பொது மக்களும், தீயணைப்பு வீரர்களும் கடலில் குதித்து தேடினர்; கிடைக்கவில்லை.

அம்மாவும், அப்பாவும் பைத்தியம் பிடித்த மாதிரி ஆகினர். ஜோதிடர், சாமியார், கோவில்கள் என, அலைந்தனர். அப்பா, வாலன்டரி ரிடையர்மென்ட் வாங்கி விட்டார்; ஆபிஸ் போவதில்லை. யாரையும் பார்ப்பதில்லை. என்னைத் தவிர யாருடனும் பேசுவதில்லை.

அம்மாவும் சாமி விளக்கு ஏற்றுவதில்லை, பூஜை செய்வதில்லை. நிறைய நாட்கள் குளிப்பது கூட கிடையாது; சமைப்பதும் இல்லை. சாப்பாடு என்பது இட்லியும், தயிர் சாதமும் தான். அக்கம் பக்கத்தினர் சாம்பார், குழம்பு, பொறியல், தோசை என, எதையாவது கொண்டு வந்து தருவர். அதைக் கூட, அவர்கள் தொடுவதில்லை.

நானும் பள்ளிக் கூடம், படிப்பு எல்லாம் மறந்துவிட்டேன். அவர்கள் இருவரையும், தனியாக விடவே பயமாக இருக்கிறது. எனக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீடே அமைதியாக, இருண்டு கிடக்கிறது; நானாக, 'லைட்' போட்டால் தான் உண்டு. இந்த நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, நானும் விடுபட, என்ன வழி ஆன்ட்டி...

- இப்படிக்கு,

கார்த்திகேயன்.



அன்புள்ள கார்த்திக்,

'புத்திர சோகம், நிரந்தரம்' என்பர். மற்ற சோகங்களை எல்லாம் தாங்கி விடலாம்; ஆனால், இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியாது.

ஆனானப்பட்ட தசரதனே, மகன் ராமனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தவித்தவர் தான். இத்தனைக்கும் ராமர் காட்டுக்குத்தான் சென்றார். தசரதன் நினைத்திருந்தால், காட்டிற்கு சென்று, ராமனைப் பார்த்திருக்கலாம். ஆனாலும் அவர், 'ராமா, ராமா...' என்று, அரற்றி தவித்தார்.

பெற்ற பிள்ளையை, தங்கள் கண் எதிரில் கடல் அலை அடித்து சென்றதை, எந்த பெற்றோரால் தான் தாங்கிக் கொள்ள முடியும்...

அவர்களது முடக்கமும், சோகமும் இயற்கையானது தான். ஆனாலும், அவர்களை இப்படியே விட்டுவிட முடியாது; விட்டு விடவும் கூடாது.

ஏன் கார்த்தி, உங்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா... உன் தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்று யாரும் இல்லையா...

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து போனதன் பலன் தான் இது. அந்தக் காலம் மாதிரி குடும்பங்கள் ஒன்றாக இருந்திருந்தால், உன் பெற்றோர் இவ்வாறு சிதிலமடைந்திருக்க மாட்டார்கள்; வீடு இருண்டு போயிருக்காது; அக்கம் பக்கத்தினர் உணவு கொடுக்கும்படி நேர்ந்திருக்காது. 

மாறி, மாறி யாராவது உன் பெற்றோர் பக்கத்தில் இருந்து, அவர்களைத் தேற்றியிருப்பர். தங்கள் மகன்களை அவர்களிடம் விட்டு, 'இதோ, இந்த குழந்தைகளைப் பார்... உன் மகன் இவர்களிடம் தான் இருக்கிறான்...' என்று சமாதானப்படுத்தி, சோகத்தில் இருந்து மீட்டு வந்திருப்பர். இப்போது கூட, ஒன்றும் தடையில்லை; உன் சொந்த, பந்தங்களை வீட்டிற்கு அழைத்து அவர்களை, கூடவே இருக்கும்படி கேட்டுக் கொள்.

உன் பெற்றோருக்கு நிச்சயம் கவுன்சிலிங் தேவை. அவர்களை மனநல மருத்துவரிடமோ அல்லது மனோதத்துவ நிபுணரிடமோ அழைத்து போகச் சொல் அல்லது நீயே அழைத்து போ. அவர்கள், நாலைந்து முறை உன் பெற்றோரிடம் பேசப் பேச, மாற்றம் ஏற்படும். அதை நீயே உணர்வாய். நல்லதே நடக்கும் என்று நம்பி போ, நல்லது மட்டும் தான் நடக்கும். எண்ணங்களுக்கு அத்தனை வலிமை உண்டு, மகனே.

- அன்புடன், இந்துமதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us