PUBLISHED ON : மே 02, 2026

கொளுத்தும் கோடை வெயில்; நண்பகல் நேரம். நகரின் தார்ச்சாலை உருகி ஓட ஆரம்பித்தது.
விரித்த குடையை தலைக்கு மேல் பிடித்தபடி, வழிப்போக்கர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் அணிந்திருந்த காலணிகளுள் ஒன்று, வெறுப்பான குரலில் பேச ஆரம்பித்தது.
'தலைக்கு மேலே உல்லாசமாக வரும் குடையாரே... நான் தார்ச்சாலையின் வெப்பத்தை
சகித்து, எஜமானரை மட்டுமின்றி, அவரது உடைமைகளான உங்கள் எல்லாரையும்
பாதுகாக்க வேண்டியுள்ளது...' என்றது.
உடனே குடை கோபித்தது.
'செருப்பு தம்பி... நான் சொல்ல வேண்டியதை, நீ சொல்கிறாய். நெருப்பைக்
கொட்டும் உச்சி வெயிலை தாங்கி, உங்கள் எல்லாருக்கும் நிழலைக் கொடுத்து
பாதுகாப்பது நான் தான். எஜமானரை தொற்றிக்கொண்டு வருகிற மற்றவர்களிடம் உன்
வெறுப்பை காட்டு...' என, குரல் எழுப்பியது குடை.
குடையின் பேச்சு முடியும் முன் குறுக்கிட்டது வேட்டி.
'நான் எஜமானரின் மானம் காப்பவன்...' என, மார் தட்டியது, வேட்டி...
'நான் உனக்கும் மேலாக, மேனியை மறைத்து, அவையேறும் அந்தஸ்தை அளிப்பவன்...' என்றது, சட்டை.
கைக்கடிகாரத்திற்கு ஆத்திரம் வந்தது.
'தவறாமல் நேரத்தைக் காட்டி, எஜமானரின் கடமையைச் செய்யத் துாண்டுவது என் பணி. யாருக்கும் இளைத்தவன் அல்ல நான்...' என்றது கடிகாரம்.
சற்று நேர அமைதிக்குப் பின், காலணி- மீண்டும் பேச்சை ஆரம்பித்தது.
'எஜமானரின் விரலில் உள்ள மோதிரம் மவுனமாக இருக்கிறதே... அது மட்டும் தான்
வெறும் அலங்காரப் பொருள். அதற்கு எவ்வித முக்கியப் பணியும் இல்லை.
சரிதானே...' என்று இளக்காரமாக கூறியது, காலணி.
அதைக் கேட்டு,
அனைத்து உடைமைகளும் ஏளனமாகச் சிரித்தன. காலணியின் கருத்தை ஆமோதித்தன.
ஆனால், மோதிரம் வாய் திறக்காமல், தொடர்ந்து அமைதி காத்தது.
ஒரு
உணவகத்திற்கு சென்று, மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தார், வழிப்போக்கர்.
கடைக்காரரின் மேஜை முன் சென்று, பணத்தை செலுத்த இடுப்பில் கட்டியிருந்த
பணப்பையைத் தேடினார்; பணப்பை இல்லை. எங்கோ தவறிப் போனதை உணர்ந்தார்.
ஒரு கணம் திகைத்து நின்றவர், உடனே தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றினார்.
'நாளை பணத்தைக் கொடுத்து, மோதிரத்தைப் பெற்றுக் கொள்கிறேன்...' எனக் கூறி புறப்பட்டார், வழிபோக்கர்.
மோதிரத்தை எள்ளி நகையாடிய எல்லா உடைமைகளும், வாயடைந்து நின்றன. எல்லாரும் ஒரு வகையில் பயனுள்ளவர் என்பதை புரிந்து கொண்டன.
குட்டீஸ்... அடக்கம் இல்லாதவர்கள் தான் தற்பெருமை பேசித் திரிவர். ஆனால்,
அறிவும், அடக்கமும் உடைய மேலோர், தளும்பாத நிறைகுடம் போல் அமைதியைக்
கடைப்பிடிப்பர்.
