/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! சத்யமேவ ஜெயதே!
/
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! சத்யமேவ ஜெயதே!
PUBLISHED ON : ஆக 10, 2024

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம்
மக்களுக்கு உணர்ச்சி பெருக்கு ஏற்படுத்த, அர்த்தமுள்ள கோஷங்கள் பயன்படுகின்றன. இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களை திரட்ட, சில கோஷங்கள் தேச பக்தியை ஊட்டின. அந்த கோஷங்கள் உருவான பின்னணியை பார்போம்...
ஜெய் ஹிந்த்!
காந்திஜிக்கு, கைராட்டை மீதிருந்த ஈடுபாடு அளவற்றது. அன்றாட வாழ்வில் அதனுடன் இணைந்தே இருந்தார். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப் திருமணம், 1947ல் நடந்தது.
அவர்களுக்கு, தன் கையால் நெய்த அழகியகதர் சால்வை ஒன்றை பரிசளித்தார் காந்திஜி. அதன் நடுவில், ஜெய்ஹிந்த் என்ற சொல் இருந்தது. சுதந்திரம் பெற்ற நள்ளிரவில், ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையின் இறுதியில், ஜெய்ஹிந்த் என்றே முடிந்தது.
உண்மையில், ஜெய்ஹிந்த் கோஷத்தை உருவாக்கியவர், தியாகி செண்பகராமன். தமிழகத்தை சேர்ந்தவர். இளம் வயதிலே ஐரோப்பா சென்று ஆங்கிலேயருக்கு எதிராக படை திரட்டியவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.
அந்த காலத்தில் இந்தியர்கள் சந்திக்கும் போது, ஜெய் மா துர்கா, சலாம் அலைக்கும், ஸத் ஸ்ரீ அகல் போன்ற மதத்தை நினைவு படுத்தும் முகமன்களாக கூறி வந்தனர். இவற்றுக்கு மாற்றாக இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் முகமன்களை அறிமுகப்படுத்த விரும்பினார் சுபாஷ் சந்திரபோஸ்.
அதற்காக பலரும் பல யோசனைகளை முன் வைத்தனர். இவற்றில், 'ஜெய்ஹிந்த்' என்ற கோஷம் மிகவும் பிடித்துப் போனது. அதையே அறிமுகம் செய்தார் சுபாஷ் சந்திர போஸ். சுதந்திரத்துக்கு பின், ஜெய்ஹிந்த் கோஷம் விடுதலையின் சின்னமாக ஆனது.
இந்திய பிரதமராக பதவி வகிக்கும் அனைவரும் முக்கிய உரைகளில், ஜெய்ஹிந்த் என கூறுவதை வழக்கமாக்கினர். இந்திராகாந்தியின் உரை இறுதியில், மூன்று முறை ஜெய்ஹிந்த் என்று கூறி, மக்களிடம் எதிரொலிக்கச் செய்வார். சுதந்திரம் பெற்ற பின் வெளிவந்த முதல் அஞ்சல்தலையின் வலது மூலையில், 'ஜெய் ஹிந்த்' என்ற கோஷம் இடம் பெற்றுள்ளது.
சத்யமேவ ஜெயதே!
இதன் தமிழ் வடிவம், 'வாய்மையே வெல்லும்' என்பதாகும். தமிழக அரசின் இலச்சினையிலும் இந்த சொற்றொடர் உள்ளது. சத்யமேவ ஜெயதே என்பது முண்டக உபநிஷத்தில் உள்ள வாசகம். இதை சுதந்திரப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா முன்னெடுத்தார். பின், பரவலாக பயன்படுத்தப்பட்டது. காந்திஜிக்கு, மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்தது மதன் மோகன் மாளவியா தான்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
இன்குலாப் என்பது உருது மொழியில், 'புரட்சி' என்ற பொருள் தரும். அதனுடன், 'ஜிந்தாபாத்' என்ற சொல் சேர்ந்தால், 'புரட்சி வெல்க' என பொருள். சுதந்திர போராட்ட வீரரும், கவிஞருமான மவுலானா அசரத் மோகானி, 1921ல் இந்த முழக்கத்தை உருவாக்கினார்.
இதை, மாபெரும் தேச பக்தரான, பகத்சிங், அவரது கூட்டாளி பி.கே.தத் பரவலாக்கினர். எழுச்சி மிக்க உரை மற்றும் சுதந்திர தாகம் உடைய எழுத்துக்கள் வழியாக நாடு முழுதும் பிரபலமானது. பின், இந்திய சுதந்திர இயக்க முழக்கங்களில் ஒன்றாக மாறியது.
வந்தே மாதரம்!
இந்தியாவின் தேசியப் பாடல் என்று கருதப்படுகிறது, 'வந்தே மாதரம்... சுஜலாம் சுபலாம்...' என்று துவங்கும் பாடல். தேச பக்தி எழுத்தாளரும், கவிஞருமான பக்கிம் சந்திர சட்டர்ஜி, வங்க மொழியில் எழுதிய பாடல். இதற்கு, 'தாய் நாடே வணக்கம்' என்பதே பொருள்.
வந்தே மாதரம் என்பது, சுதந்திரப் போராட்டத்தில் பெரும் முழக்கமாக உயிர் பெற்றது.
கவிஞர் பாரதியார் இந்த சொல்லால் ஈர்க்கப்பட்டு, 'வந்தே மாதரம் என்போம்; எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்...' என்று துவங்கும் இனிய பாடலை எழுதினார். அது, தேசிய உணர்ச்சியை வெகுவாக இன்றும் ஊட்டிக் கொண்டிருக்கிறது. சுதேசி இயக்கத்தில், வந்தேமாதரம் கோஷம் முக்கிய பங்கு வகித்தது.
- ஜி.எஸ்.எஸ்.,