
வீட்டு தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசின மல்லிகை பூக்கள். அந்த பூக்களை பறிக்க வந்தாள் அமுதா.
'எங்களை பறித்து, வாழை நாரில் தொடுத்து, கூந்தலில் சூடிக்கொள்ள போகிறாயா...'
கேட்டன மல்லிகை பூக்கள்.
'இல்லை... நான் படிக்கும் அரசு பள்ளி தலைமையாசிரியை பறித்து வர சொல்லி இருக்கிறார்...'
'ஏதாவது உயிரற்ற உடல் மீது துாவப் போகிறார்களா...'
சந்தேகம் எழுப்பியது பூக்களில் ஒன்று.
'அப்படியும் இருக்கலாம்... வேறு வகையிலும் பயன்படலாம்... வீண் விவாதம் எதற்கு... சற்று பொறுத்திருந்து தான் பாருங்களேன்...'
நிதானமாக தெரிவித்தாள் அமுதா.
அமைதியடைந்தன பூக்கள்.
பறித்த பூக்களை, மெல்லிய இலை ஒன்றில் அழகாக பொதிந்து வைத்தாள்.
தொடர்ந்து, அவற்றின் பயணம் துவங்கியது.
'தோட்டத்தில், சுதந்திரமாகவும், நல்ல காற்றையும் சுவாசித்தோம். இப்போது அடிமை நிலை ஏற்பட்டுள்ளது...'
வருந்தி பேசிக்கொண்டன பூக்கள்.
சிறிது நேரத்தில், பூக்கள் மெல்லிய பருத்தி துணிக்குள் மாற்றி பொதியப்பட்டது.
தொடர்ந்து...
தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலி கேட்டது. ஆறுதல் அடைந்தன மல்லிகை பூக்கள்.
அதேசமயம், போர்த்தியிருப்பது இந்திய தேசியக்கொடி என உணர்ந்து சிலிர்த்தன.
மூவர்ணக்கொடி, கம்பத்தின் மீது நிதானமாக ஏறியது. உச்சம் தொட்டதும், சிறிது சிறிதாக விரிந்து, பட்டொளி வீசி பறந்தது. அதற்குள் வைக்கப்பட்டிருந்த மல்லிகை பூக்கள் சிதறி சிரித்தன.
கொடி கம்பத்தின் கீழ், சீருடை அணிந்த மாணவ, மாணவியர் அணிவகுத்தனர். தேசியக்கொடிக்கு, 'சல்யூட்' அடித்தனர்.
இது கண்டு மகிழ்ந்தன பூக்கள். சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பெருமிதம் அடைந்தன.
பட்டொளி வீசி பறந்தது தேசியக்கொடி!
தேசியகீதம் ஒலிப்பது கேட்டு, மெய் மறந்து கிடந்தன பூக்கள்.
பட்டூஸ்... நம் நாட்டின் ஒற்றுமையை மதித்து, சுதந்திரத்தை போற்றுவோம்!
●●●