PUBLISHED ON : ஜன 31, 2026

திண்டுக்கல் மாவட்டம், மா.மு.கோவிலுார், சி.எஸ்.எம்.ஏ., உயர்நிலை பள்ளியில், 1969ல், 9ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக இருந்த எஸ்.மதனகுரு, மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று, ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடத்துவார். அந்த மாதம், 'நாட்டிற்கு தேவை சர்வாதிகாரமா, ஜனநாயகமா' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.
சர்வாதிகாரம் எனும் தலைப்பில், வரலாற்று ஆசிரியர் ஜான் பீட்டர் தலைமையில் ஒரு குழுவும்; ஜனநாயகம் எனும் தலைப்பில், தமிழாசிரியர் தில்லை கோவிந்தன் தலைமையில் ஒரு குழுவும் வாதிட்டனர். நடுவராக தலைமையாசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.
இதில் ஒரு புதுமையாக, பள்ளி மாணவர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, முன்வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர். பட்டிமன்றத்தை நன்றாக கவனித்து, முடிவில் தீர்ப்பளிக்கும் வகையில், மாணவர்கள் ஓட்டளிக்க வேண்டும். இதில் நானும் ஒருவன்.
பட்டிமன்றம் காரசாரமாக நடைபெற்றது. சர்வாதிகாரம் எனும் தலைப்பில் பேசியோர், கவர்ச்சியாகவும், வர்ணனையாகவும் வாதிட்டனர். ஜனநாயகம் எனும் தலைப்பில் பேசிய குழுவினர், பல உதாரணங்களை முன் வைத்து நாட்டு நிலை குறித்து பேசினர்.
முடிவில், எங்களுடைய ஓட்டுகளை அறிவித்தார், தலைமையாசிரியர். மாணவர்கள் 30 பேரில், 29 பேர் சர்வாதிகாரத்திற்கும்; நான் ஒருவன் மட்டும் ஜனநாயகத்திற்கும் ஓட்டளித்திருந்தோம். ஜனநாயகத்துக்கு ஆதரவு அளித்த ஒரே மாணவனான என்னை, அந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார், தலைமையாசிரியர். ஓட்டெடுப்பில் சர்வாதிகாரம் வென்றாலும், நாட்டுக்கு தேவை ஜனநாயகமே என, அவர் தீர்ப்பளித்தார்.
தற்போது, என் வயது 71. பின்னாளில் நான் பத்திரிகை தொடர்பில் இருப்பதற்கு, அந்த பட்டிமன்றமும், தலைமையாசிரியர் எஸ்.மதனகுரு அளித்த தீர்ப்பும் தான் காரணம். என் நினைவில், அவர் இப்போதும் வாழ்கிறார்.
- ஏ.அப்துல் மாலிக், திண்டுக்கல். தொடர்புக்கு: 81224 65716
