PUBLISHED ON : செப் 26, 2026

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இந்துநாடார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 2003ல், 11ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
வகுப்பாசிரியையாக இருந்த சேர்மாதேவி, மாணவர்களின் திறன் அறிந்து ஊக்குவிப்பார். அன்று வகுப்பறையில், 'பாடத்தை வாசியுங்கள்...' என்று கூறி விட்டு, மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கத் துவங்கினார். அப்போது அனைவரையும் கண்காணித்தபடி பள்ளி வளாகத்தை வலம் வந்தார் தலைமையாசிரியர்.
ஜன்னல் வழியாக இதை கவனித்து, மெதுவான குரலில், தகவலை வகுப்பாசிரியையிடம் தெரிவித்தோம். ஏமாற்றப் பார்வையை எங்கள் மீது வீசியபடி, அதே வேலையைத் தொடர்ந்தார்.
தலைமையாசிரியர் கடந்த பின், 'முறையாக பாடம் நடத்திய பின் தான், வேறு பணியை செய்கிறேன்; தவறு ஏதும் செய்யவில்லை. பணிகளைச் சரிவர செய்கின்றனரா என்பதை தான் கண்காணிக்க வருகிறார், தலைமையாசிரியர்...
'அவரைக் கண்டவுடன், என் செயலை மாற்றினால், அதுவரை நான் செய்தது எல்லாம் தவறு என்றாகி விடும். இது, தவறு செய்வதை விட மோசமானது. பள்ளியில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுதும் இதை மனதில் கொண்டு நேர்மையாக வாழுங்கள்...' என, அறிவுரைத்தார் வகுப்பாசிரியை. அது, பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது.
எனக்கு, 39 வயதாகிறது; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்ற பண்புகளை, நடத்தையால் புரிய வைத்த வகுப்பாசிரியை சேர்மாதேவியை வணங்குகிறேன்.
- சாந்தி சந்திரசேகரன், திருவாரூர்.
தொடர்புக்கு: 94869 82815
