தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புராஜெக்ட் ஓ (6)

புராஜெக்ட் ஓ (6)

புராஜெக்ட் ஓ (6)


PUBLISHED ON : செப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: பள்ளி மாணவ - மாணவியருக்கான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, ஐந்து மாணவ - மாணவியர் கூட்டாக உருவாக்கிய திட்டத்துடன், உரிய பொருட்களுடன் ஆய்வகத்தில் கூடியிருந்தனர். வழிகாட்டியாக செயல்பட்டு கொண்டிருந்தார் ஆசிரியை மதிவதனி.

இனி -

'பு ராஜெக்ட் ஓ' திட்டத்துக்காக, மண்புழு, பல்லி, நாட்டுக்கோழி முட்டைகள், மேஜையில் வைக்கப்பட்டிருந்தன.

ஆய்வை வழி நடத்தும் ஆசிரியை மதிவதனி உள்ளிட்ட அனைவர் முகத்திலும் பரபரப்பு.

பிரார்த்தனைக்குப் பின், துரிதமாகச் செயல்பட்டார், மதிவதனி. சுத்திகரிக்கப்பட்ட ஊசியால் விரலில் குத்தி, ரத்தத் துளிகளைச் சேகரித்தார்.

தன் ரத்தம், மண்புழுவின் உடல் திரவம், பல்லியின் ரத்தத்தை பிரத்யேக வேதித்திரவங்களுடன் கலந்து, 'மைக்ரோஸ்கோப்' துணையோடு, மரபணுக்களைப் பிரித்தெடுக்கும் பணியில் இறங்கினார்.

இதை பார்த்து வியந்த அஞ்சலி, ''டி.என்.ஏ-.,வைப் பிரிக்கிறது இவ்ளோ சாதாரண விஷயமா...'' என்றாள்.

''விஞ்ஞானம் இப்போ எவ்வளவோ வளர்ந்திருச்சு...'' என்று, இடையில் புகுந்தான், கதிர்.

''உனக்கு இதைப் பத்தி என்ன தெரியும்...'' என்று முறைத்தாள், வினோதா.

''எனக்குத் தெரியாது. ஆனா, கூகுளுக்குத் தெரியுமே... நேற்று இரவு தான், 'நெட்'ல தேடிப் பார்த்தேன். இப்போ நவீன, 'ரேபிட் கிட்' கருவிகள்லாம் வந்தாச்சு. டீ போடுற நேரத்தில், டி.என்.ஏ-.,வை துாக்கி வெளிய வச்சிடலாம்...'' என்று, சிரித்தபடி சொன்னான், கதிர்.

கதிரின் முதுகில் தட்டினார், மதிவதனி.

''நீ சொல்றது சரி தான். நான் பண்ணிட்டு இருக்குற, உயிரியல் பிஎச்.டி., ஆராய்ச்சிக்காக, இந்த மாதிரியான நவீனக் கருவிகளையும், மரபணுக்களை வேகமா பிரிக்கிற பிரத்யேக ரசாயன திரவங்களை, ஏற்கனவே வாங்கி வச்சிருந்தேன். அதான் வேலை இவ்ளோ வேகமா முடியுது...'' என்றார் புன்னகையுடன்.

அ டுத்த சில நிமிடங்கள் நிசப்தம் மட்டுமே நிலவியது.

பிரிக்கப்பட்ட மதிவதனியின் ரத்த வெள்ளை அணுக்கள், மண்புழுவின் உடல் திரவம், பல்லியின் ரத்தம் ஆகியவற்றில் இருந்து, டி.என்.ஏ., பிரிக்கப்பட்டது.

அவற்றை நுண்ணிய குழாயில் செலுத்தி, புதிய மரபணுக் கலவையாக்கப்பட்டது.

பின், ஒரு நுட்பமான மைக்ரோ- ஊசி வாயிலாக, திரவத்தின் ஒரு பகுதியை உறிஞ்சி எடுத்தார் மதிவதனி.

முட்டையை கவனமாக, இடது கையில் பிடித்து, மைக்ரோ- ஊசியால், அதன் மேல் துளையிட முயன்றார்.

அனைவரும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பரபரப்பான நொடியில், மதிவதனி கையில் இருந்த ஊசி வழுக்கியது.

'டடக்...'

மெல்லிய சத்தத்துடன் முட்டை உடைந்து, விரிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தாள் மீது வழிந்தது.

அஞ்சலியும், வினோதாவும் பதற்றத்தில் கத்தினர்.

மதிவதனி முகத்தில் ஏமாற்றமும், கவலையும் படர, ''ச்ச்ச்... சாரி...'' என்றார்.

ஊசியை போட்டு, சோர்வுடன், நாற்காலியில் சாய்ந்தார்.

அங்கே நிலவிய இறுக்கமான சூழ்நிலையை மாற்ற முயன்றனர், நண்பர்கள். மதிவதனியை அணுகி கையைப் பற்றினாள், அஞ்சலி.

''அதற்கென்ன மேம், மரபணுக் கலவை இன்னும் இருக்கே... நான் தான் நாலு முட்டை கொண்டு வந்திருக்கேனே... இதோ அடுத்த முட்டை...'' என்று, சற்றும் சளைக்காமல் நீட்டினான், கதிர்.

அதே நேரத்தில், பள்ளி துவங்க மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

''அச்சச்சோ... பெல் அடிச்சிடுச்சே, மேம்...'' என்றான், பதற்றமாக பரத்.

''நீங்க, அஞ்சு பேரும் ஆய்வகத்தில் இருக்குறத, வகுப்பாசிரியர் கல்பனாவுக்கு சொல்லிட்டேன். அவங்க, 'அட்டென்டண்ஸ்'ல பார்த்துக்குவாங்க...'' என்ற மதிவதனி, மீண்டும் துரிதமாகச் செயல்பட்டார்.

இந்த முறை கூடுதல் கவனத்துடன் முட்டையின் மேல், துல்லியமாக துளையிட்டு, கரு வட்டு புள்ளியினுள், மரபணுக் கலவையைச் செலுத்தினார். முட்டையின் ஓட்டில் ஏற்பட்டிருந்த சிறிய துளையை, பாக்டீரியாக்கள் உள்ளே போகாதபடி, பிரத்யேக மெழுகால் அடைத்தார்.

''சக்சஸ்... நம்ம, 'புராஜெக்ட் ஓ'வோட முதல் கட்டம் முடிஞ்சது...''

பெருமூச்சுடன் சொன்ன மதிவதனி, அந்த முட்டையை பத்திரமாக எடுத்து, அஞ்சலியிடம் கொடுத்தார்.

''கதிர், 'இன்குபேட்டரை' திற... முட்டையை அதுல வைக்கட்டும், அஞ்சலி...''

ஆ ய்வக மூலையில் இருந்த, 'இன்குபேட்டரை' கதிர் திறக்க, முட்டையை தட்டில் வைத்தாள், அஞ்சலி.

உட்புற கண்ணாடிக் கதவை கதிர் மூட, அதன் வழியே முட்டை தெரிந்தது. மதிவதனியும், மற்ற மூவரும் கைதட்டினர்.

வெளிப்புற உலோகக் கதவை மூடி, முட்டை பொரிப்பதற்கான மிதமான வெப்பநிலையை அமைத்தார், மதிவதனி.

''மேம், இன்னிக்கு வெள்ளிக்கிழமை. அப்புறம் ரெண்டு நாள் விடுமுறை. நாம வந்து இந்த முட்டையை பார்க்கணுமா...'' என்று, ஆர்வமுடன் கேட்டான், கதிர்.

''இன்குபேட்டரில் வெப்பநிலை தானியங்கியாக செயல்படும் வகையில் அமைத்து விட்டேன். அதனால ரெண்டு நாள் இதுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை...''

''மேம், 'கரன்ட் கட்' ஆனா...'' சந்தேகம் எழுப்பினான், குமார்.

''அதில், 'பேட்டரி பேக் அப்' இருக்கு, குமார். திங்கட்கிழமை காலை வந்து பார்க்கலாம்...'' என்றார், மதிவதனி.

ஆனால், திங்கட்கிழமை பேரதிர்ச்சி காத்திருந்தது.



- தொடரும்...

- ஜாரா நரேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us