
சமூக குளவிகளில் ஒரு வகை காகித குளவி. இது, மரப்பட்டையை மென்று, காகிதம் போலாக்கி கூட்டை உருவாக்கும். அதனால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. கூடு, திறந்த அமைப்புடன் தொங்கும் வடிவில் இருக்கும். வீட்டுக் கூரை, மரங்களில் கூடு கட்டும். தேன், பழச்சாறு போன்றவற்றை உணவாக கொள்ளும்.
கூட்டில், ராணி, தொழிலாளி, ஆண் என்ற வகைமையில் சமூக அமைப்பாக வசிக்கும். காகித குளவி, மற்ற பூச்சிகளை வேட்டையாடும். பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கம்பளிப்பூச்சியை கட்டுப்படுத்த உதவும். இதனால் விவசாயத்துக்கு நன்மை பயக்கிறது .
முக அடையாளத்தை அறியும் திறன் கொண்டது. பூச்சிகளில் இது அரிதான பண்பு. கூட்டைப் பாதுகாக்க ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபடும். இதனால் மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படும். இதன் கூடு இருக்குமிடத்தில் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
சுற்றுச்சூழலை பராமரிப்பதில் இதன் பங்கு அளவிடற்கரியது. இதன் கூடு கட்டும் திறன் மிகவும் அற்புதமான ஒன்றாக உள்ளது.
- -மு.நாவம்மா