
சென்னை, ராமகிருஷ்ணாமடம் வடக்கு கிளை பள்ளியில், 1970ல், 9ம் வகுப்பில் சேர, என் மாமாவுடன் சென்ற போது கூட்டம் அலைமோதியது. ஓடுகள் வேய்ந்த கட்டடத்தில் காத்திருந்தோம். சற்று நேரத்துக்கு பின், உயரமான தோற்றமுள்ள பெரியவர் விசாரித்தார். விபரம் சொன்னதும், 'அட்மிஷன் முடிந்து விட்டதே...' என்றார்.
பின், மதிப்பெண்ணை விசாரித்த போது, 'ஐயா, 80 சதவீதம் வாங்கியுள்ளேன்...' என்றதும் திருப்தி அடைந்தார். என் மாமா, 'பாடுவதற்கு நன்றாக பயிற்சி பெற்றுள்ளான்...' என பரிந்துரைத்தார். உடனே, பாரதியார் கவிதை ஒன்றை பாடக் கேட்டார். உணர்வு பெருக்குடன், 'காக்கை சிறகினிலே நந்தலாலா...' என கணீர் குரலை உயர்த்தினேன். உடனே, சேர்க்கையை உறுதி செய்து, கட்டணம் செலுத்த பச்சை மையில் சீட்டு எழுதி கொடுத்தார்.
அது தலைமையாசிரியர் ஓ.வி.கோபாலன் என பின்னர் தெரிந்துக் கொண்டேன். ஒழுக்கம், அடக்கம், எளிமை போன்ற பண்புகளை அவரிடம் கற்றுக் கொண்டேன். மகாகவி பாரதி படைப்புகளில், அதிக ஈடுபாடு காட்டி வந்தார். ஏழை மாணவர்களின் படிப்பு செலவை ஏற்று உதவி செய்வதை வழக்கமாக்கியிருந்தார்.
எனக்கு, 65 வயதாகிறது. வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது, யுடியூப் சேனலில் பாடி வருகிறேன்.
அந்த தலைமையாசிரியர் காட்டிய வழியில் ஏழை மாணவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வாழ்கிறேன்.
- எஸ்.கிருஷ்ணகுமார், சென்னை.