
விருதுநகர் மாவட்டம், சாத்துார், இந்து நாடார் எட்வர்டு மேல்நிலைப் பள்ளியில், 1985ல், மேல்நிலை முதல் ஆண்டு படித்த போது நடந்த நிகழ்வு!
தாவரவியல் ஆசிரியராக இருந்தார் தேவசகாயம். செயல்முறையாக கற்பிப்பார். கல்வி சுற்றுலாவாக, மூன்று நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம்.
செண்பகனுார் அருங்காட்சியகத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு உட்பட செலவுகள் எல்லாம் இலவசம்.
பங்கேற்போருக்கு நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பார்ப்பவற்றை ஒன்று விடாமல் எழுதி, குறிப்பேடாக சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பாக தயாரிப்போரை அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்போவதாக அறிவித்திருந்தார் ஆசிரியர்.
அன்று மாலை, இயற்கை வளங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற தகவல்கள் உடைய படக்காட்சி காட்டப்பட்டது. பார்த்தவற்றை எல்லாம் எழுதி பதிவேடாக சமர்ப்பித்து திரும்பினோம். அதில், இரண்டு பேர் மட்டும் அடுத்த கட்டத்துக்கு தேர்வாயினர். எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது வருத்தம் தந்தாலும், ஏராளமாக கற்க முடிந்தது.
தற்போது, என் வயது, 56; தனியார் நுாற்பு ஆலையில் பணி செய்து வருகிறேன். பள்ளி கல்வி சுற்றுலாவில், கவனமாக செயல்பட்டிருந்தால், சிறப்படைந்திருக்கலாம் என இப்போது உணர்கிறேன். இயற்கையை பாதுகாக்கும் அறிவையும், ஆர்வத்தையும் வளர்த்த அந்த ஆசிரியரை போற்றி வணங்குகிறேன்.
- இ.நாகராஜன், விருதுநகர்.
தொடர்புக்கு: 88703 71809