
வேப்பம்பட்டி எல்லையில், நிழல் தரும் மாமரம் இருந்தது. அதில் காய்க்கும் பழங்களை கூடையில் எடுத்து செல்வர் மக்கள்.
அன்று வாழை, மாதுளை, சப்போட்டா என, வெவ்வேறு பழங்களை கொடுத்தது மாமரம்.
அதை கண்டு அதிசயித்த மக்கள், பஞ்சாயத்து தலைவரிடம் விபரம் தெரிவித்தனர்.
சிந்தனையில் மூழ்கினார் தலைவர்.
மக்களும் அதில் உள்ள உண்மையை அறிய முயன்றனர்.
அச்சமயம் அங்கு வந்தார் ஒரு முதியவர்.
ஒரு பழக் கதையை சொன்னார்.
இவ்வூரை ஆண்ட மன்னர் தோட்டத்தில், பழ செடிகளை நட்டு பராமரித்தார். அங்கு வந்த அணில்கள், கனிகளை விரும்பி உண்டன. அதை ரசித்தார் மன்னர்.
உடனிருந்த அமைச்சர், 'நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட காரணம் அணில்கள் தான்; இப்போதே விரட்ட உத்தரவிடுங்கள்...' என்றார்.
'அணில்கள் பசியாறட்டும். அதுவும் ஒரு உயிரினம் தான் என உணருங்கள்...'
இதை கவனித்தது அங்கிருந்த தேவதை. உடனே, மன்னர் முன் தோன்றி, 'தங்களிடம் உள்ள இரக்க குணமும், உயிரினங்களிடம் காட்டும் அன்பையும் பார்த்து வியந்தேன். தங்களுக்கு வரம் ஒன்றை அளிக்கிறேன்; நீங்கள் வளர்க்கும் இந்த மாமரம், பலவகை பழங்களையும் தரும். நாட்டு மக்கள் பசியை போக்கும்...' என்றது.
இதை கேட்டதும், உயிரினங்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தனர் மக்கள். அதிசய மரத்தின் உட்பொருளை உணர்ந்தனர்.
பட்டூஸ்... பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவோம்!
- ப. காருண்யா