
சென்னை, மாதாவரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 10ம் வகுப்பு படித்தேன்.
அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வந்தது. அதில், ஆங்கிலம், கணித பாடங்களில் தோல்வி அடைந்திருந்தேன். வகுப்பாசிரியை மல்லிகாவை சந்தித்து, ரிப்போர்ட் கார்டு வாங்க வந்திருந்தார், என் அம்மா. அவரிடம் மென்மையான குரலில், 'முழு ஆண்டு தேர்வை நன்றாக படித்து எழுதச் சொல்லுங்கள்...' என்று அறிவுறுத்தினார்.
என் அம்மாவோ, 'படிப்பு சரியாக வரவில்லை என்பதால், ஒரு துணி கடைக்கு வேலைக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன்...' என அலட்சியமாக கூறினார். இதை கேட்டு பதறி, 'அப்படி எல்லாம் செய்து விடாதீர். அதிகாலை எழுந்து படிக்க சொல்லுங்கள். நன்றாக மனதில் பதியும். பெண் பிள்ளைக்கு, நகை, பணம் சேமிப்பதை விட, கல்வி அளிப்பது தான் சிறந்தது. வருங்காலத்தில் உழைத்து முன்னேறுவாள்...' என்று அறிவுரைத்தார். அம்மா மனதில் மாற்றம் ஏற்பட்டது.
தற்போது, என் வயது 47; சுயமாக தொழில் செய்கிறேன். பெண்கள் படிப்பதற்கு, வயது வரம்பு கிடையாது என்ற பாடத்தை அனுபவமாக பெற்றுள்ளேன். பள்ளியில் அந்த ஆசிரியை கூறியதை மனங்கொண்டு கடின உழைப்பால் முன்னேறி வருகிறேன்.
- பி.இந்துராணி, சென்னை.