
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், தம்பித் தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1991ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...
வகுப்பாசிரியையாக இருந்த அலோசியஸ், தமிழ் பாடமும் கற்று தந்தார். மிகவும் எளிமையானவர்; விளங்கும்படி பாடம் நடத்துவார்.
அப்போது, சத்துணவு திட்டத்தில் வாரத்திற்கு, இரண்டு நாட்கள் முட்டை வழங்குவர். அந்த நாட்களில் மட்டும் உணவு வாங்குவேன். முட்டையை மட்டும் சாப்பிட்டு, சாதத்தை குப்பையில் கொட்டி விடுவேன்.
இதை கவனித்து, வகுப்பாசிரியையிடம் தெரிவித்தனர் சக மாணவியர். என்னை அழைத்து, 'சாதம் சாப்பிடாமல், வயிற்றை காய போட்டால் நலமுடன் வாழ முடியாது. உணவை கொட்டுவதால் உழவர்களின் உழைப்பு வீணாகிறது... பாரதி எழுதிய, 'தனி மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாடலை விவரித்து சமீபத்தில் தானே பாடம் நடத்தினேன். அதன் பொருள் கூட புரியவில்லையா...' என கேட்டார். தவறை உணர்ந்து திருந்தினேன்.
தற்போது என் வயது, 43; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு வேளையும், தேவைக்கு ஏற்ற அளவில் மட்டும் சமைக்கிறேன். உணவுப் பொருட்களை வீணடிக்காமல், அளவாக பயன்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளேன். பள்ளியில் அந்த ஆசிரியையிடம் பெற்ற அறிவுரையை, என் குழந்தைகளுக்கும் கூறி, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறேன்.
- ம.வசந்தி, விழுப்புரம்.