
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே மொளச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1969ல், 7ம் வகுப்பு படித்தேன். அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுக்கும் நான், கணிதத்தில் மட்டும் மிகவும் பின் தங்கியிருந்தேன்.
அப்போது கணிதத்துக்கு புதிய ஆசிரியராக வந்தார் இருதயராஜ். நகைச்சுவை ததும்பும் வகையில் பாடங்களை நடத்துவார். எண்கள் மனதில் பதியும் வகையில் எளிமையாக கற்பிப்பார். பின்தங்கியிருந்த என்னிடம், 'எண்களை புரிந்து கொண்டால் கணக்கு கசக்காது...' என நம்பிக்கை ஊட்டினார்.
அதை சுலபமாக நினைவில் கொள்ளும் வழிமுறையில் புரிய வைத்தார். உற்சாகத்துடன் கற்று அரையாண்டு தேர்வில், இரண்டாம் இடத்திற்கு முன்னேறினேன்.
தற்போது என் வயது 67; தமிழக அரசு சமூக நலத்துறையில் ஊர்நல அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எட்டிக்காயாக கசந்த கணித பாடத்தை கட்டிக் கரும்பாய் சுவைக்கும் வகையில் புகட்டிய கணித ஆசிரியர் இருதராஜை போற்றி வாழ்கிறேன்.
- எம்.சந்திரிகா, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 98944 82052

