
கடலுார் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 9ம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றினேன். ஏழ்மையான குடும்ப பின்னணியுள்ள மாணவர்கள் தான் அங்கு படித்தனர். அதில் பாச்சாரபாளையம் கிராமத்தை சேர்ந்த வித்யாசாகரும் ஒருவர். விவசாயத்தை தொழிலாக உடையது அவரது குடும்பம். உரிய காலத்தில் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் திணறுவார் அவரது தந்தை. போதிய கால அவகாசம் வழங்கி உதவ பள்ளி நிர்வாகத்திடம் அவ்வப்போது பரிந்துரைப்பேன்.
அன்று பள்ளியில் பணி முடிந்து திரும்பிய போது, வீட்டருகே பலாப்பழத்துடன் நின்றிருந்தார் அந்த விவசாயி. கனிவுடன் அதை தந்து, 'ஐயா... மிகவும் ருசியாக இருக்கும். சாப்பிடுங்கள்...' என்றார். மகனுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்ற பற்றுடன் கொடுப்பதாக எண்ணி வாங்கினேன்.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லுாரியில் சேர்ந்துவிட்டார் அந்த மாணவர். சில நாட்களுக்கு பின் மீண்டும் வீட்டிற்கு வந்த அந்த விவசாயி, 'ஐயா... மகன் கல்லுாரிக்கு செல்ல பயணச் செலவுக்கு சிறிது பணம் தேவைப்படுகிறது. இருந்தால் கொடுத்து உதவுங்கள்...' என்று கேட்டார். எதுபற்றியும் சிந்திக்காமல் கேட்ட தொகையை கொடுத்தேன்.
பின், குடியிருந்த வீட்டை மாற்றி வேறுபகுதிக்கு சென்றுவிட்டேன். ஏழு ஆண்டுகள் கடந்தன. பழைய நிகழ்வுகள் எல்லாம் மறந்து விட்டன. ஒரு நாள் மாலை திடீரென வீடு தேடி வந்தார், அந்த விவசாயி. பல ஆண்டுக்கு முன், என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தந்து நலம் விசாரித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பேராசிரியராக, மகன் பணிபுரிவதாக தகவல் கூறி மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.
எனக்கு, 66 வயதாகிறது. பணி ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறேன். காலம் கடந்தும் கவனம் பிசகாது என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தந்து நேர்மையை நிரூபித்த அந்த விவசாயியை எண்ணும் போது பெருமிதமடைகிறேன். நாணயத்துக்கு இலக்கணமாக திகழ்பவரை நினைவில் இருந்து அகற்ற இயலவில்லை.
- ஜி.கலியபெருமாள், சென்னை.