
சிலிக்கா என்ற மணல், சோடியம் கார்பனேட், சுண்ணாம்பு கலந்து உருக்கினால் உருவாகிறது கண்ணாடி. ஊதுதல், அச்சு வார்த்தல் வழியாக பல பொருட்களாக மாற்றப்படுகிறது.
கி.மு.3500ல் வடக்கு ஆப்ரிக்கா, எகிப்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது கண்ணாடி. எரிமலைச் சாம்பலுடன் மணல் கலந்து உருகி கண்ணாடி ஏற்பட்டதாக கருதப்படுகிறது. பின், கண்ணாடி உலை தொழில் நுட்பம் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினர் ரோமானியர்.
கண்ணாடியில் பல வகைகள் உள்ளன. சோடா- லைம் என்பது பாட்டில் உருவாக்க பயன்படுகிறது. டெம்பர்டு கண்ணாடி வலிமை மிக்கது. உடைந்து துண்டுகளானாலும் ஆபத்து ஏற்படுத்தாது.
பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது புல்லட் புரூப் கண்ணாடி. இது அடுக்கு முறையில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கலவையால் தயாராகிறது. அதிவேகமாக பாய்ந்து வரும் துப்பாக்கி தோட்டாவையும் தடுக்கும் அளவிற்கு உறுதியானது.
வெப்பத்தைத் தாங்கும் திறனுள்ளது பைரெக்ஸ் கண்ணாடி. சமையல் பாத்திரம் மற்றும் ஆய்வகக் கருவிகள் தயாரிக்க உதவுகிறது. இது வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களையும், சேதத்தையும் தடுக்கிறது. அலங்காரக் கலைப் பொருட்கள் உருவாக்க வண்ணக் கண்ணாடி பயன்படுகிறது. சிற்பம், விளக்கு, ஜன்னல் ஓவியம் தயாரிப்பில் பயன்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு கண்ணாடி வகையும் தனித்துவத்தால் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலக அளவில் அண்டை நாடான சீனா தான், கண்ணாடி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடான ஜெர்மனியும் பெற்று உள்ளன.
- வ.முருகன்