
பூச்சி இனங்களில் வித்தியாசமானது கும்பிடு பூச்சி. இதற்கு தொழுவன், தயிர்க்கடை பூச்சி என்ற பெயர்களும் உண்டு. முன்னங்கால்களை துாக்கி, வணங்குவது போல் நிற்கும். இதை ஆங்கிலத்தில், ஈரோப்பியன் மேன்டிஸ் என்பர்.
இது பல்வேறு நிறங்களில் காணப்படும். அதிகமாக செடி, கொடிகளில் இருக்கும். சில வகை காய்ந்த இலைச் சருகு போல் காணப்படும். இதன் தலை அனைத்து திசைகளிலும் இயல்பாக திரும்பும். தலையில் இரு கூட்டுக் கண்களும், மூன்று புள்ளிக் கண்களும், இரண்டு உணர் கொம்புகளும் உண்டு.
வாயில் இரண்டு வலுவான பற்களால் செடி, கொடிகளில் வசிக்கும் பூச்சிக்களை வேட்டையாடி உண்ணும். உருவத்தில் பெரிய ஓணான், பல்லி, உடும்பு, பாம்புகளையும் முட்கள் நிறைந்த முன்னங்கால்களால் தாக்கி செயலிழக்கச் செய்யும். பின் மெல்ல மெல்ல அவற்றை உண்ணும். இது பயிர்களை அழிக்கும் பூச்சிகளை வேட்டையாடுவதால், விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது.
இதற்கு ஒரு வித்தியாசமான பண்பு உண்டு. மூர்க்கத்தனம் கொண்டது. இனப்பெருக்கத்திற்காக இணையும் போது, ஆண் பூச்சியின் தலையைக் கடித்து தின்றுவிடும் பெண் பூச்சி. பார்க்க சாதுவாய் கும்பிடுவது போல் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் குடும்ப செல்ல பிராணி போல் வளர்க்கப்படுகிறது.
- மூ.மோகன்