
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில், 2013ல், 9ம் வகுப்பு படித்த போது, ஓவிய ஆசிரியராக இருந்தார் யோகாநந்தா. அடிப்படையாக தந்திருந்த பயிற்சி அடிப்படையில் வீட்டுப்பாடமாக ஓவியம் வரைந்து வர கூறியிருந்தார்.
அடுத்த வகுப்பில் வரைந்து சமர்ப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அவகாசம் கேட்டோம்.
அதைக் கேட்டதும், 'நாளை... பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவு ஏதாவது நடந்தால், உங்களால் எப்படி சமர்ப்பிக்க முடியும்...' என்று கேள்வி எழுப்பினார்.
சிரிப்பால் அதிர்ந்தது வகுப்பறை. அவர் கூறியதன் பொருள் அன்று சரியாக புரியவில்லை; நகைச்சுவையாக எடுத்திருந்தேன். காலப்போக்கில் பொருள் புரிந்தது. கடமையில், காலம் தவறக் கூடாது என போதித்திருந்ததை உணர்ந்தேன்.
என் வயது, 25; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறேன். வகுப்பறையில் அந்த ஆசிரியர் அறிவுறுத்தியபடி, பணிகளை காலமறிந்து செயலாற்றுகிறேன். அதன் வழி மகிழ்வுடன் வாழ்கிறேன்.
- செ.அட்சயா, கோவை.