
ஈரோடு மாவட்டம், கலிங்கியம் அரசு நடுநிலைப்பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
வகுப்பாசிரியர் முத்துசாமி மிகவும் கண்டிப்பானவர். தவறு செய்வதை கண்டால் அடி வெளுத்து விடுவார். அவரது தண்டனைக்கு யாரும் தப்பியது இல்லை.
உடன் படித்த கந்தசாமி கல்வியில் ஓரளவு திறனுள்ளவன்; குறும்பில் முதல் ரகம். பயமின்றி லுாட்டி அடிப்பான். அவனை திருத்தும் விதமாக, அளவுகோலால் அடித்து, காதை பிடித்து திருகினார் வகுப்பாசிரியர். அதை புரிந்து கொள்ளாமல், 'மொத்து சாமி...' என அவர் பெயரை மாற்றி கிண்டல் செய்தான்.
அடிக்கு பயந்து, அடம்பிடித்து டி.சி., வாங்கி, கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தான்.
நடுநிலை படிப்பை முடித்து, 9ம் வகுப்பில் அதே பள்ளிக்கு சென்றோம். எங்களை கண்டதும் மகிழ்ச்சியில் குதித்தான். அது நெடுநாள் நீடிக்கவில்லை. யாருக்கு பயந்திருந்தானோ, அதே ஆசிரியர் பதவி உயர்வில் மாறுதலாகி அங்கு வந்திருந்தார்.
நொந்தசாமி ஆனான் கந்தசாமி. வகுப்பு துவங்கிய அன்று, அவன் காதை திருகி, 'வசமா மாட்டிக்கிட்டாயா...' என்று கேட்டார் அந்த ஆசிரியர். கலங்கிய பார்வையுடன் திருதிருவென முழித்தவனிடம், 'குறும்பு செய்யாமல் படித்தால், நான் ஏன் உன்னை அடிக்கிறேன். கவனமாக படித்து முன்னேறு...' என்று அறிவுரைத்தார். பயம் நீங்கி, படிப்பில் ஆர்வம் காட்டினான்.
எனக்கு, 60 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அச்சம் அகற்றி படிக்க அறிவுறுத்திய அந்த ஆசிரியரை போற்றுகிறேன்!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
தொடர்புக்கு: 99940 16314