
கோகுலின் வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம் உண்டு.
அதில் ஒரு அழகிய மாமரம். நெடிதாக வளர்ந்து விரிந்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவத்தில் குயில் ஒன்று அந்த மரத்துக்கு தவறாமல் வந்து கொண்டிருந்தது.
குயில் வந்தால் வசந்த காலம் துவங்கி விட்டதாக புரிந்து கொள்வான் கோகுல்.
அவனுக்கு, 10 வயதாகிறது. பள்ளி ஒன்றில், 5ம் வகுப்பு படிக்கிறான்.
பருவம் தவறாமல் வரும் குயிலை கண்டதும் நெகிழ்ந்து புன்னகைப்பான். அதன் குரலில் கிறங்கி மகிழ்வான்.
அன்று குயில் வந்தது.
ஆர்வம் பொங்க, ''எப்படி இருக்கிறாய் நண்பா...'' என்று கேட்டான் கோகுல்.
'அக்காவ்... அக்காவ்...'
பதில் சொல்வது போல் கூவியது குயில்.
அது, 'நன்றாக இருக்கிறேன்... நீ எப்படி இருக்கிறாய்...' என, நலம் விசாரிப்பதாக புரிந்து கொண்டான் கோகுல்.
அத்தனை எளிதாக கண்களுக்கு புலப்படாது குயில். இலைகள் அதை மறைத்திருக்கும். அவ்வப்போது கிளைகளின் ஊடாக மின்னலைப்போன்று தாவி மறையும்.
தொடர்ந்து கவனித்து பயிற்சி பெற்றிருந்ததால் 'குயில் கருமை நிறம் உடையது' என கண்டு கொண்டான் கோகுல்.
அது ஆண் குயில் என விளக்கினார் பாட்டி.
உடலை வருடிச் சென்றது காலைத் தென்றல். அது வசந்தம் வந்ததை சொன்னது. குயில் வழக்கம்போல் அந்த பருவத்திலும் வரவில்லை.
மூ ன்று ஆண்டுகள் கடந்தன -
இந்த ஆண்டும் வரவில்லை குயில்.
''எதனால் வரவில்லை...''
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அப்பாவிடம் கேட்டான் கோகுல்.
''இதை விட பசுமையான இடத்துக்கு மாறிப் போயிருக்கலாம்...''
அப்பாவின் பதிலை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
'குயிலுக்கு ஏதும் ஆகியிருக்குமோ'
கவலை கொண்டான் கோகுல்.
சில நேரங்கள் காகங்கள் உக்கிரமாக குயிலை துரத்துவதை பார்த்திருக்கிறான்.
சிலர் வேட்டையாடுவதையும் கவனித்திருக்கிறான்.
குயிலை பிடித்து போய் கூண்டில் அடைப்பதாக பள்ளி நண்பர்கள் வழியாக கேள்விப்பட்டிருந்தான்.
இதுபோல் சிந்தனையால் படிப்பில் கவனம் குறைந்தது.
மீண்டும் அப்பாவிடம் வந்தான்.
''குயில் ஏம்பா நம்ம வீட்டுக்கு வரல...''
நச்சரிக்கத் துவங்கினான் கோகுல்.
''என் மேல ரொம்ப பிரியமா இருந்துச்சு...''
கற்பனையில் பிதற்றினான்.
அப்பாவிற்கு கோபம் வந்தது.
இருந்தாலும் கட்டுப்படுத்தியபடி, ''குயிலை நீ வளர்க்கல... அது உன் கூட சிநேகமா இருந்துச்சுன்னு சொல்லாதே... அது மேல நீ பிரியமா இருந்தேன்னு சொல்லு... அதுதான் சரியா இருக்கும்...'' என நிதானமாக திருத்தம் சொன்னார்.
''இல்லப்பா... குயில் என்னை பார்த்தா படபடக்கும். கிளை விட்டு கிளை தாவும். உற்சாகமா குரல் கொடுக்கும். என்னோட பேசும்...''
அவன் சொன்னதை கூர்ந்து கேட்டார் அப்பா.
பின், தெளிவு ஏற்படுத்தும் வகையில், ''நீ ஒவ்வொருமுறை தோட்டத்தின் பக்கம் போகும் போதும் புதுசா ஒரு நடமாட்டம் தெரியுதே... இதுனால ஆபத்து வருமான்னு தன்னோட பாதுகாப்பை உறுதி செய்யத்தான் குயில் படபடத்தது. அது, ஒரு வகையான எச்சரிக்கை உணர்வு. 'குயில் என்னோட பேசுற மாதிரி இருக்கு... அது எனக்காக கூவுது' என்பதெல்லாம் உன்னோட கற்பனை. இந்த மாதிரி விஷயங்களில் மனம் வைப்பதை விட்டு பாடங்களில் கவனம் செலுத்து...'' என்று அறிவுரைத்தார் .
அதை ஏற்க மனமின்றி தலையை மட்டும் ஆட்டினான் கோகுல்.
ம றுநாள் -
காலை கண் விழித்தான் கோகுல்.
'அக்காவ்... அக்காவ்...'
தோட்டத்தின் பக்கம் குயில் குரல் கேட்டது.
படுக்கையிலிருந்து எழுந்து ஓடினான் கோகுல்.
கூர்ந்து பார்த்த போது மாமரத்தில் குயில் ஒன்று இருந்ததை கண்டான்.
'இது பழையது இல்லை... வேறு குயில்'
பார்த்த மாத்திரத்திலே தெரிந்து விட்டது.
முன்பு வரும் குயிலை காட்டிலும் உருவத்தில் சிறியதாய் இருந்தது.
கோகுலைப் பார்த்தவுடன் இந்த குயிலும் படபடத்தது. கிளைக்குக் கிளை தாவியது. குரல் கொடுத்தது.
கோகுலுக்கு அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. அதுதான் சரி என தோன்றியது.
'வசந்த காலத்தில் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கூவும் குயிலின் குரல், மகிழ்ச்சியும், உற்சாகமும் தருகிறதே... அதில் பொய்யிருப்பதாக தெரியவில்லையே...'
எண்ணியபடி புது விருந்தினரை வரவேற்கும் விதமாக, மென்மையாக குரல் எழுப்பினான் கோகுல்.
அதை புரிந்த மாதிரி ஒருமுறை, 'அக்காவ்...' என்றது குயில்.
பட்டூஸ்... இயற்கையை புரிந்து மகிழ்ந்து பாதுகாக்க வேண்டும்.
- குறிஞ்சி பிரபா

