தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வினோத தீவு! (2)

வினோத தீவு! (2)

வினோத தீவு! (2)


PUBLISHED ON : ஆக 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சென்றனர். அவர்கள் சென்ற விமானம் எழிலாக தரையிறங்கியது. இனி -



ல ட்சத்தீவுக்கு சுற்றலா வந்து மூன்று நாட்கள் கடந்து விட்டன.

கத்மத் பகுதியில் அவர்கள் தங்கிய ஓட்டல் இருந்தது. அங்கு காலை உணவை முடித்து சுற்றுலா வழிகாட்டியுடன், இரண்டு குடும்பத்தினரும் புறப்பட்டனர்.

''ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று பங்காரம் தீவுக்கு செல்ல போகிறோம்...'' என்றார் சுற்றுலா வழிகாட்டி.

ரீனாவும், மாலினியும் உற்சாகமாயினர்.

''தெளிவான நீரை உடைய ஆழமற்ற கடற்கரை சிறுவர், சிறுமியருக்கு மிகவும் பிடிக்கும்...''

சுற்றுலா வழிகாட்டி விளக்கினார். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் மூலம் அனைவரும் படகு துறைக்கு வந்தனர்.

அங்கிருந்து அவர்களை ஏற்றி செல்ல, 12 பேர் பயணம் செய்யும் வகையில் பைபர் படகு தயாராக இருந்தது.

ரீனாவும், மாலினியும் உற்சாகமாய் படகில் ஏறினர். தொடர்ந்து, அவர்களது பெற்றோரும் ஏறினர்.

புரியாத மொழியில் ஏதோ சொன்னான் படகோட்டி.

''என்ன சொல்கிறார்... ஏதோ ஒரு மொழி மாதிரி இருக்கிறது...''

சிரித்தாள் ரீனா.

''அது திவேஹி என்ற மொழி. இந்த தீவில் வசிக்கும் பூர்வக் குடிகள் பேசுவர்...

''படகில் ஒரே பகுதியில் சேர்ந்து உட்காராமல், பரவலாக அமரும்படி அவரது மொழியில் சொல்கிறார் படகோட்டி...''

விளக்கமளித்தார் சுற்றுலா வழிகாட்டி.

''ஒரே பகுதியில் எடை அதிகரித்தால், அந்த பக்கம் படகு கவிழ்ந்து விட வாய்ப்பு உள்ளது...''

மாலினியின் அப்பா விளக்கம் தர, அதற்கேற்ப அமர்ந்தனர்.

''படகோட்டுபவருக்கு தமிழ் தெரியாதா...''

வினவினாள் ரீனா.

குறுக்கிட்டு, ''எனக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கில மொழிகள் பேசத் தெரியும். ஆனால், எங்கள் தாய்மொழியான திவேஹி மறந்து விடக் கூடாது என்பதற்காக மொழி தெரிந்தவர்களுடன் பேசிக் கொள்வது வழக்கம்...'' என்றார் படகோட்டி.

மோட்டார் சத்தத்துடன் தண்ணீரில் சீறிப் பாய்ந்தது படகு.

ரீனாவும், மாலினியும் உற்சாகத்தில் குதுாகலித்தனர்.

''பயண அனுபவம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. பயங்கரம் தீவுக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்...'' என்றாள் மாலினி.

சுற்றுலா வழிகாட்டி உட்பட அனைவரும் சிரித்து விட்டனர்.

''குழந்தை... அது, 'பயங்கரம்' தீவு இல்லை. பங்காரம் தீவு. சற்று நேரத்தில் சென்று விடலாம்...''

படகோட்டி திருத்தினார்.

''என்னை மன்னித்து விடுங்கள்... பங்காரம் தீவு தான்; வாய் தவறி பயங்கரம் தீவு என்று சொல்லி விட்டேன்...''

சிரித்தாள் மாலினி.

''அங்கிள்... நாம் சுற்று வழியில் செல்லலாமா... மற்ற தீவுகளையும் பார்த்த மாதிரி இருக்கும். கடல் பயணத்தையும் அனுபவித்த மாதிரி இருக்கும்...'' என்றாள் ரீனா.

திவேஹி மொழியில், படகோட்டியிடம் பேசிய பின் சுற்றுலா வழிகாட்டி, ''கூடுதல் பணம் தருவதானால் செல்லலாம் என்கிறார்...'' என்று விளக்கம் தந்தார்.

''அதற்கென்ன... குழந்தைகள் ஆசைப்படுகின்றனர்; கொடுத்து விடலாம்...'' என்றார் மாலினியின் அப்பா.

குட்டி குட்டி தீவுகளைப் பார்த்தபடி படகில் பயணித்தனர். படகின் இஞ்சின் சத்தம் வேறு விதமாக கேட்க ஆரம்பித்தது.

படகோட்டி ஏதோ சொல்ல, வழிகாட்டியின் முகம் கோபமாக மாறியது.

''என்னாச்சு...'' என்றார் ரீனாவின் அப்பா.

''இஞ்சின் சத்தம் வித்தியாசமாக வருகிறது. அதை என்னவென்று பார்த்து விட்டு தொடர்ந்து பயணிக்கலாம்...'' என்றார் படகோட்டி.

''சரி பரவாயில்லை... கடலில் போகும் போது பழுதாகி நின்று விடாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக சரி செய்து செல்வது நல்லது தானே...''

அருகில் தெரிந்த தீவின் பக்கம் படகை திருப்பினார் படகோட்டி.

உயரமான மரங்கள் அந்த தீவில் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன.

''இது என்ன தீவு அங்கிள்...''

கேட்டாள் ரீனா.

''இது பெயரிடப்படாத ஒரு தீவு. இப்பகுதியில் இருப்போர் இதை வினோத தீவு என்பர்...''

''பெயரே வினோதமாக இருக்கிறது...'' என்றாள் மாலினி.

''இது மிகவும் சிறிய தீவு. மிக குறைந்த அளவில் லட்சத்தீவின் பூர்வீக குடியினர் இங்கே வசிக்கின்றனர்...''

''சுவாரசியமாக இருக்கிறது...'' என்றாள் மாலினி.

''இங்கே, 100 பேர் வரை மட்டுமே வசிப்பதாக சொல்லுகின்றனர். அவர்கள் தீவின் நடுப்பகுதியில் மட்டுமே இருப்பர். வெளியில் வருவதில்லை என்பதால், அவர்களை பெரும்பாலும் யாரும் பார்த்தது இல்லை...''

படகோட்டி கூறிய விஷயம் ரீனாவுக்கும், மாலினிக்கும் வியப்பை தந்தது.

''பூர்வீகக் குடிகள் பற்றி இங்கு உள்ளவர்களுக்கே சரியாக விபரம் தெரியாது. இந்த தீவில் விளையும் அபூர்வமான பழங்கள், மருத்துவ குணம் கொண்ட கீரைகள் போன்றவற்றை விற்பதற்காக சில பெண்கள் எப்போதாவது, கரை பக்கம் வருவது உண்டு. அப்படி வரும் போது படகோட்டிகள் அவர்களுக்கு தானியங்களையும், உணவுப்பொருட்களையும் கொடுத்து விட்டு பண்டமாற்று முறையில் வாங்கி செல்வர். இந்த தீவில் வசிக்கும் ஆண்களை இதுவரை யாரும் பார்த்ததாக தெரியவில்லை...''

கூடுதல் தகவலைச் சொன்னார் வழிகாட்டி. படகு தீவின் கரையோரம் நிறுத்தப்பட்டது.

''படகை சரி செய்ய அரைமணி நேரமாவது ஆகும். இது ஆபத்தில்லாத கடற்பகுதி தான். கடற்கரை ஆழமாக இருக்காது. அலையிலும் வேகமிருக்காது. தண்ணீரில் விளையாடலாம்...''

படகோட்டி கூறியதும், சிறுமியர் உற்சாகமாயினர். எல்லாரும் படகிலிருந்து குதித்து, முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி கடற்கரை மணலுக்கு வந்தனர்.

மிகவும் சுத்தமான வெள்ளை மணலுடன் கடற்கரை அழகாக இருந்தது. கரையில் பல வண்ணத்திலும், வடிவத்திலும் சிப்பிகள் சிதறிக் கிடந்தன. சில நுாறு அடிகள் தொலைவில் மரங்கள் இருந்தன. ஒருபுறம் வனமும், மறுபுறம் கடலும், நடுவில் சுத்தமான மணல் பரவிய கரையும் மனதுக்கு மகிழ்ச்சியை தந்தன.

''இன்றைக்கு அந்த பழங்குடி பெண்கள் யாராவது வருவரா...''

கேட்டாள் ரீனா.

''அவர்கள் எப்போது வருவர் என்பதெல்லாம் தெரியாது; வந்து கடற்கரையில் நிற்பர். அவர்கள் நிற்பதை பார்க்கும் படகோட்டிகள் இந்த பக்கம் வந்து பொருட்களை வாங்கி செல்வர்...''

''இன்றைக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும். அவர்களிடம் பேசி தீவைப் பற்றி அறிந்து கொள்ளலாம்...'' என்ற ரீனா, தீவில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள் பக்கம் பார்வையை திருப்பினாள்.

மரங்களினுடாக ஏதோ அசைவு தெரிந்தது. ஒரு சிறுவன் நிற்பது போல தோன்றியது.

உற்றுப் பார்த்தாள் ரீனா. கண்களை அவளாலே நம்ப முடியவில்லை.

ஒரு குரங்கின் அளவுக்கு மட்டுமே உயரமும், உடற்கட்டும் உடைய இளைஞன் அங்கே நின்றிருந்தான்.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us