
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப்பார்த்தனர். ஒரு தீவுப்பக்கம் பயணித்த போது வினோத காட்சியை கண்டாள் ரீனா. அதை வியப்புடன் உற்று நோக்கினாள். இனி -
தீ வில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்களின் ஊடாக, குரங்கு அளவு மட்டுமே உயரமும், உடற்கட்டும் உடைய இளைஞன் நின்றிருந்தான். அதை வியப்புடன் பார்த்தாள் ரீனா.
அது மனிதன் தானா... அல்லது ஏதாவது குரங்கினமா என்று அவளுக்கு சந்தேகம் வந்தது.
உற்றுப்பார்த்தாள்.
மனிதனே தான். உயரம் குறைவாக இருந்தது. அவன் 16 வயது மதிக்கத்தக்கவனாக இருந்தான். மீசை அரும்பும் பருவம்.
அவனும் ரீனாவை பார்ப்பது போல தோன்றியது.
உயரம் குறைந்த மனிதர்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறாள் ரீனா. திரைப்படங்களிலும் கூட பார்த்திருக்கிறாள்.
ஆனால், இந்த இளைஞன் அவள் பார்த்த எல்லாரையும் விட, உடற்கட்டில் மிகவும் சிறியவனாக இருந்தான்.
அருகில் இருந்த மாலினியை அழைத்தாள் ரீனா.
''அங்கே பாரேன்...''
அவள் சுட்டிக்காட்டிய வினாடி அந்த இளைஞன் மரங்களுக்குள் மறைந்தான்.
''என்ன ரீனா...''
திரும்பிய மாலினி, ரீனா சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தாள்.
''அங்கே ஒரு குள்ள மனிதன் நின்றிருந்தான்...''
வியப்புடன், ''குள்ள மனிதனா எங்கே...'' என்றாள் மாலினி.
பின் மரங்களினுாடாகப் பார்வையால் அவசரமாக தேடினாள்.
''யாரும் இல்லையே ரீனா...''
''நான் பார்த்தேன் மாலினி...''
''பிரமையாக இருக்கும்...''
''இல்லை... நான் பார்த்தது நிஜம் தான். அவன் மூன்றடி உயரம் தான் இருந்தான். ஒல்லியான உடல்வாகு...''
''பக்கத்தில் போய் பார்த்து வரலாமா...''
மாலினி கேட்க, தயங்கினாள் ரீனா.
''நான் சொல்கிறேன் அது பிரமை தான். வேண்டுமானால் போய் பார்க்கலாம். நானும் கூட வருகிறேனே...''
தன்னோடு மாலினி வருவதாக சொன்னதும் ஆர்வம் ஏற்பட்டது.
''வா போய் பார்த்து வரலாம் ரீனா...''
மீண்டும் வலியுறுத்தினாள் மாலினி.
ரீனா ஒப்புக்கொண்டாள்.
''அப்பா... நாங்கள் அந்த மரம் வரை நடந்து போய் விட்டு வருகிறோம்...''
ரீனா கேட்க யாருடனோ மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அப்பா மறுத்தார்.
''வேண்டாம் அங்கே எல்லாம் போகக்கூடாது. ஏதாவது வன விலங்கு இருக்கும்...''
இவர்களது உரையாடலைக் கவனித்து கொண்டிருந்த வழிகாட்டி சிரித்தார்.
''இங்குள்ள தீவுகளில் வனவிலங்கு எதுவும் இருக்காது. பாம்பு கூட கிடையாது. சிறு பூச்சிகள் இருக்கலாம். அவை ஆபத்து ஏற்படுத்துவதில்லை. மற்றபடி பறவைகள் தான் அதிகமிருக்கும்...''
ஆபத்து இல்லாத வனம் என்று சொன்னதும் ரீனாவுக்கும், மாலினிக்கும் ஆர்வம் அதிகரித்தது.
அப்பாவும் அதன்பின் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அலைபேசி உரையாடலில் மூழ்கிவிட்டார்.
''பெயரிடப்படாத இந்த தீவில் கூட அலைபேசிக்கு சிக்னல் கிடைக்கிறது. இந்தியா தொழில்நுட்பத்தில் ரொம்பவே வளர்ந்திருக்கிறது...'' என கூறியபடி மாலினி, முன்னே நடக்க, ரீனா தொடர்ந்தாள்.
அவர்கள் அந்த மரத்தை நெருங்கிய போது, பின்னால் இருந்து குள்ள மனிதன் வந்தான்.
சிறுவனும் அல்லாமல், இளைஞனும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட வயதில் இருந்தான்.
ஒரு குரங்கின் வளர்ச்சி அளவே உடலும் இருந்தது. வால் மட்டும் தான் இல்லை.
அவனைப் பார்த்ததும், மாலினியும் ஆச்சரியப்பட்டாள். நடந்து கொண்டிருந்த அவர்கள் அப்படியே வியப்புடன் நின்றனர்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.பார்வை ரீனாவின் கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை நோக்கியிருந்தது.
அவன் கண்களில் ஆர்வம் தெரிந்ததை உணர்ந்தாள் ரீனா.
மாலினிக்கும் அப்படித் தான் தோன்றியது .
''சிப்ஸ் கேட்கிறான் போலிருக்கு ரீனா...''
கையில் இருந்த சிப்சை காட்டி, ''வேண்டுமா...'' என்று ரீனா கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.
சிப்ஸ் பாக்கெட்டை நோக்கி அவன் கை நீண்டது.
''கேட்கிறான்டி...'' என்றாள் மாலினி.
சிப்ஸ் பாக்கெட்டை நீட்டியபடியே மெல்ல நடந்து இருவரும் அணுகினர்.
அவர்களைப் பார்த்து பயந்து ஓடாமல் அங்கேயே நின்றிருந்தான்.
ரீனா சிப்ஸ் பாக்கெட்டை கொடுத்தாள். சின்ன புன்னகையுடன் வாங்கி கொண்டான்.
அடுத்த வினாடி குரங்கைப் போல மரத்தில் தாவி ஏறி, தாழ்வான கிளையில் போய் அமர்ந்து கொண்டான்.
சிறுமியருக்கு அவன் செய்கை மிகவும் ஆச்சரியம் தந்தது.
''ரொம்ப வினோதமாக இருக்கிறான்...'' என்றாள் மாலினி.
''உனக்கு சம்சாரிக்கான கழியும்...'' என்றான் மெதுவாக.
அவன் பேச்சு சாதாரணமாகவே இருந்தது.
''மலையாளம் பேசுற மாதிரி இருக்கு ரீனா...'' என்றாள் மாலினி.
அவன் காதில் அவள் பேசியது விழுந்திருக்க வேண்டும், ''எனக்கு தமிழும் அறியும்...'' என்றான் அவன்.
அதே சமயம், அந்த மரங்களுக்கு இடையே யாரோ நடமாடுவது போல சலசலப்பு கேட்டது.
அந்த திசையில் திரும்பி பார்த்தவன், ''ஐய்யய்யோ வந்து விட்டனர்...'' என்று கடும் பதற்றத்துடன் கூறினான்.
அடுத்த வினாடி கிளைகளில் தாவி மின்னல் வேகத்தில் மறைந்து விட்டான்.
''அவனைப் பார்க்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு... குட்டி மனுஷனாக இருக்கிறான்...'' என்றாள் மாலினி.
''அதை விடு... போகும் போது அவன் பதற்றத்துடன் கூறிய வார்த்தைகளை கேட்டாயா...''
''ஏதோ சொன்னான். சரியாக கவனிக்கவில்லையே ரீனா...''
''அவர்கள் வந்து விட்டனர் என்றபடி பதறி போனான். அப்படியானால் யாரையோ கண்டு பயப்படுகிறான்; அவனுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது...'' கவலையுடன் கூறினாள் ரீனா.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்