
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புனித அந்தோனியார் நடுநிலை பள்ளியில், 1973ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். இது அரசு நிதி உதவி பெற்று இயங்கியது. இருபாலரும் படித்தோம். இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
ஆரம்பக் கல்வியை கேர்பெட்டா ஒசஹட்டி கிராம பள்ளியில் முடித்தேன். புதிய பள்ளியில் கற்பிக்கும் முறையில் நிறைய வேறுபாடுகள் தெரிந்தன. எனவே வகுப்பில் பாடங்களை புரிந்து கொள்ள இயலாமல் தவித்தேன். எங்கள் வகுப்பாசிரியை ஸ்டெல்லா மேரி, மாணவ, மாணவியர் மீது அன்பும் அக்கறையும் உடையவர். ஒவ்வொருவர் மீதும் தனி அக்கறை எடுத்திருந்தார். என் இயலாமை கண்டு, 'அடுத்த ஆண்டும் இதே வகுப்பில் படி... உன்னை சிறந்த மாணவனாக்கி காட்டுகிறேன்...' என நம்பிக்கை ஊட்டினார்.
அந்த காலத்தில் வகுப்பில், 'ஆல்பாஸ்' என்ற நடைமுறை கிடையாது. நன்றாக படிக்கும் மாணவர் மட்டுமே அடுத்த வகுப்புக்கு முன்னேற முடியும். வகுப்பாசிரியை கூறியது போல, அடுத்த கல்வி ஆண்டிலும் அதே வகுப்பில் தொடர்ந்தேன். முதன்மை மாணவனாக தேர்ச்சி பெற்றேன். குடும்ப சூழ்நிலையால், 10ம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டேன்.
எனக்கு 64 வயதாகிறது. கவிதை, சிறுகதை, நகைச்சுவை துணுக்குகள் எழுதிவருகிறேன். தமிழ் மொழி மீது ஆர்வத்தை துாண்டி எழுத்துப்பணிக்கு அடிப்படை அமைத்த வகுப்பாசிரியை ஸ்டெல்லா மேரியை வணங்கி வாழ்கிறேன்.
- கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி.
தொடர்புக்கு : 80988 50514

