
விருதுநகர் மாவட்டம், குல்லுார்ச்சந்தை, ஸ்ரீவீரப்பா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில், 1980ல், 9ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியையாக இருந்தார் செல்லம்மாள். தமிழ் பாடமும் நடத்துவார். அன்று பாடவேளையில் ஆன்மிக பெரியோர் பற்றி விளக்கினார். அருட்பிரகாச வள்ளலாரின் ஜீவகாருண்ய கோட்பாடு மற்றும் சேவைகளை தெளிவாக எடுத்துரைத்தார்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் பிறந்து, இந்தியாவில் குடியேறி ஏழை, எளிய தெருவோர வாசிகள், நோயாளிகளுக்கு மகத்தான சேவை புரிந்த, அன்னை தெரசா பற்றியும் அறிமுகம் செய்தார். சுயநலமற்ற மனிதநேய தொண்டின் மேன்மையை எடுத்து சொன்னார். அது பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.
பள்ளி படிப்பை முடித்து, 22ம் வயதில் திருமணம் நடந்தது. இரண்டு மாத வாழ்வில் கருத்து வேறுபாட்டால் மணமுறிவு ஏற்பட்டது. மறுமணம் வேண்டாம் என உறுதியோடு பெற்றோருடன் வசித்து வந்தேன். மன உளைச்சலில் போராடிய எனக்கு அமைதியும், ஆத்ம திருப்தியும் தேவைப்பட்டது.
இந்த நிலையில் பிரபல மருத்துவமனையில் செவிலியர் பணி கிடைத்தது. அதை ஏற்ற நிமிடம் அன்னை தெரசாவின் மருத்துவ சேவை பற்றி பள்ளியில் தமிழாசிரியை கூறிய வார்த்தைகள் ஆழ் மனதில் ஒலித்தன. அதன்படி செயல்பட தீர்மானம் எடுத்தேன். தற்போது என் வயது 59; செவிலியராக, 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். நோயில் உழல்வோரை மனித நேயத்தோடு அணுகி, கனிவான சேவை வழங்கி வருகிறேன். மண வாழ்வில் தோற்றாலும் மகத்தான மருத்துவ சேவை செய்யும் எண்ணத்தை விதைத்தார் பள்ளி ஆசிரியை செல்லம்மாள். என் மனக்கோவிலில் தெய்வமாக தோன்றி வழிகாட்டியவரை வணங்கி வாழ்கிறேன்.
- எஸ்.மரகதவள்ளி, விருதுநகர்.

