
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். விடுமுறையில் குடும்பத்தினருடன் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற போது, அங்கு குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்தனர். சுற்றுலாவை முடித்த பின், ஆசிரியை ஜான்வி ஆலோசனையுடன் அவர்களை மீட்கும் திட்டத்தை வகுக்க தகவல்கள் சேகரித்தனர். இனி -
''சுரங்கம் பற்றிய தகவல் தேடுவதை விட்டு, ஆழ்த்துளைக் கிணறுகள் குறித்த விபரங்களை தேடலாம் ரீனா...''
''ம்...ம்...ம்... அப்படியே ஆழ்த்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகள் எப்படி மீட்கப்பட்டனர் என்ற தகவல்களையும் சேகரிக்க வேண்டும்...''
இருவரும் தகவல் சேகரிப்பை தொடர்ந்தனர். மீட்பு திட்டத்திற்கு, 'ஆபரேஷன் லியோ' என ஒரு பெயரையும் சூட்டினர்.
ஒரு மாத காலம் அதிவேகமாக ஓடி விட்டது.
லட்சத்தீவுகளில் முகாமிடுவதற்கான நாளும் வந்தது.
ஆசிரியை ஜான்வி உட்பட, மூன்று ஆசிரியர்கள், 30 மாணவியரும் அந்த முகாம் சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.
வியப்புக்குரிய நிகழ்வாக, சிறுமியர் குடும்பத்துடன் ஏற்கனவே தங்கியிருந்த கத்மத் பகுதியில், அதே ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
மதிய உணவை முடித்து கொண்டதும், ரீனாவும், மாலினியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தனர்.
இரண்டு பேருக்கு ஒரு அறை என வகைப்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி மாலினி, ரீனா இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
''தங்குமிடம் கூட சாதகமாக அமைந்திருக்கிறது...''
மாலினி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
''இங்கே கடற்கரை அருகில் தான் அந்த படகோட்டி இருப்பார். நம்மை மறந்திருக்க மாட்டார். அவர் உதவியுடன் அந்த தீவிற்கு மிக சுலபமாக சென்று வரலாம்...''
''நாளை காலை தானே முகாம் ஆரம்பிக்க போகிறது. இப்போது நாம் அந்த வினோத தீவிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாமா...''
ரீனா கேட்க மாலினியும் ஒப்புதலாக தலையசைத்தாள்.
இருவரும் ஜான்வியிடம் வந்தனர்.
''மிஸ்... நாங்கள் இருவரும் அந்த வினோத தீவிற்கு போய் பார்த்து விட்டு வரலாம் என நினைக்கிறோம். அனுமதி கொடுப்பீர்களா...''
கேட்டு விட்டு முகத்தை பார்த்தாள் ரீனா.
''இப்போதேவா...''
ஜான்வியின் முகத்தில் யோசனை ஓடியது.
'என்ன சொல்லப் போகிறார்'
எதிர்பார்ப்புடன் இருந்தனர் இருவரும்.
''இரவு உணவு வரை எந்த வேலையும் இல்லை. எல்லாரும் ஓய்வெடுக்கப் போகின்றனர்... வாருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன்...'' என்றார் ஜான்வி.
ஆர்வமும், மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க மூவரும் புறப்பட்டனர்.
'ரீனாவும், மாலினியும் இங்குள்ள தீவு ஒன்றின் கடற்கரையில் சிப்பி வகைகள் பற்றியும், அவற்றின் தன்மைகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை எழுதப்போகின்றனர்' என்பதை முன்னதாகவே பிற மாணவியர், ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தார் ஆசிரியை ஜான்வி.
எனவே, எந்த ஒரு தடங்கலும் ஏற்படவில்லை. தங்கள் பயணத்தில் ஆபரேஷன் லியோ மீட்பு திட்டத்தை ஆரம்பித்தனர்.
''இப்போது லியோவை பார்க்க முடியுமா...'' என ஜான்வி கேட்டார்.
''முடியும் என்று தான் நினைக்கிறேன் மிஸ்...''
''மணி இப்போது 2:30 ஆகிறது... நாம் மாலை 5:30 மணிக்குள் திரும்பி விட வேண்டும்...''
மற்ற ஆசிரியர்களிடம் மாணவியரைக் கவனித்துக் கொள்ள சொன்ன ஜான்வி, அவர்களுடன் புறப்பட்டார்.
மூவரும் கடற்கரைக்கு வந்த போது, அந்த படகோட்டி அங்கே இருந்தார். சிறுமியரை அடையாளம் கண்டு புன்னகைத்தார்.
''மீண்டும் வந்திருக்கிறீர்களா...''
''ஆமாம்... இப்போது எங்கள் பள்ளியில் இருந்து ஆராய்ச்சி சுற்றுலாவுக்காக வந்திருக்கிறோம். இது எங்கள் ஆசிரியை ஜான்வி மேடம்...'' அறிமுகப்படுத்தினாள் ரீனா.
''நாம் முன் சென்றோமே... அந்த வினோத தீவிற்கு போகலாமா...''
''அங்கேயா, கேம்ப் போகிறீர்கள். அது பெயர் இல்லாத தீவாயிற்றே... அங்கு செல்ல அனுமதி கிடைக்காது...''
''அந்த தீவின் கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகளை பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறோம்...''
''ஆராய்ச்சி என்றால் எத்தனை நாள் அங்கே போவீர்கள்...''
''பத்து நாட்கள் காலையில் போய்விட்டு மாலையில் திரும்பி விடுவோம்...''
''எல்லா நாளும் என் படகை தான் பயன்படுத்த வேண்டும்...''
உரிமையோடு கேட்டுக் கொண்டார் படகோட்டி.
''நிச்சயமாக...''
ரீனா சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தார் படகோட்டி.
''இப்போது அங்கு போக வேண்டுமா... இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடுமே...''
''பரவாயில்லை... இன்று ஆராய்ச்சி தொடர்பான எந்த ஒரு வேலையும் இல்லை. அந்த இடத்தை போய் பார்த்து வரப்போகிறோம். அவ்வளவு தான்...''
''சரி போகலாம்...''
படகோட்டி தன் படகை தயார் செய்தார்.
''உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதை சொல்லி விடுங்கள்...''
பெரிய மனுஷி போல பேசினாள் ரீனா.
''பள்ளி பிள்ளைகளான நீங்கள் ஆராய்ச்சிக்காக வந்திருக்கிறீர்கள். உங்களிடம் எதுவும் அதிகமாய் கேட்கப் போவதில்லை...''
நியாயமான ஒரு தொகையை சொன்னார் படகோட்டி. ஒத்துக்கொண்டனர்.
''காலை, 9:00 மணிக்கெல்லாம் எங்களை அழைத்து சென்று விடுங்கள். மாலை 5:00 மணிக்கு திரும்ப வந்துவிட வேண்டும்...''
தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.
லியோவிற்காக கொஞ்சம் தின்பண்டங்களை வாங்கியிருந்தனர். அதையும் தவறாமல் எடுத்து புறப்பட்டனர்.
- தொடரும்...
நரேஷ் அருண்குமார்

