
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 12ம் வகுப்பு படித்தபோது, இயற்பியல் ஆசிரியராக இருந்தார் சுந்தர பாண்டியன். மாணவர்களின் முகபாவம் பார்த்தே குடும்ப பொருளாதார நிலையை அறிந்து கொள்வார். வகுப்பில் பாடம் நடத்தும் முன், பொது அறிவு தகவல் மற்றும் அறிவியல் செய்திகளை தெரிவிப்பார். குறைந்த கட்டணத்தில் தனிப்பயிற்சி வகுப்பும் நடத்தி வந்தார்.
அன்று ஆண்டு இறுதி செய்முறை தேர்வு முடிந்தது. பள்ளி வாழ்வின் கடைசி நாள். தனிப்பயிற்சி பெற்றதற்கான கட்டணத்தை கொடுக்க அந்த ஆசிரியரை சந்தித்தோம். கனிவுடன் வரவேற்று, 'மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறீர்...' என விசாரித்தார்.
சொல்வதறியாமல் விழித்ததை ரசித்தபடி, 'எக்ஸாம் ரிசல்ட் வரட்டும். அப்புறம் முடிவு செய்யலாம்...' என கூறியவரிடம், கட்டணத்தை கொடுத்தோம். அதை வாங்க மறுத்து, 'பெற்றோரிடமே பணத்தை திருப்பி கொடுத்துடுங்க... நன்றாக படித்து நல்ல வேலைக்கு போங்க...' என ஆசிர்வதித்தார். அது நெகிழ்ச்சி தந்தது.
இப்போது என் வயது 45. தபால்துறையில் தற்காலிக பணியாளராக உள்ளேன். பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் குடும்ப சிரமங்களை அறிந்து உதவும் உள்ளத்துடன் செயல்பட்ட ஆசிரியர் சுந்தர பாண்டியனை, சந்தித்து நலம் விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அவரது வகுப்பறை செயல்பாடு மனதில் இனிமையாக நிறைந்து உள்ளது.
- கோ.குப்புசாமி, கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: 98401 46754

