
மயிலாடுதுறை மாவட்டம், கோமல் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 6ம் வகுப்பு படித்தேன். கணிதம், விஞ்ஞான பாடங்களை ஆசிரியர் வைத்தியநாதன் நடத்துவார். காதில் கடுக்கன் அணிந்து கம்பீரமாக காட்சி தருவார். அன்றன்று நடத்திய பாடத்தில் மறுநாள் கேள்விகள் கேட்பார். பதில் கூறாவிட்டால் பிரம்படி உண்டு. அவரை கண்டாலே அஞ்சி நடுங்குவோம்.
அன்று மனக்கணக்கு பற்றி கேட்டபோது திருதிருவென முழித்தேன். அவ்வளவுதான். என் காது வீங்கிவிட்டது. மூங்கில் குச்சியால் அடித்ததில் என் உள்ளங்கை சிவந்து கனிந்த பழம் போலாகியது. அப்போது வகுப்பறை பக்கம் வந்த மற்றொரு ஆசிரியரான என் தந்தையை அழைத்து, 'இது போன்ற மக்குகளை எப்படி தான் புள்ளையா வளக்குறாங்களோ... கத்தி கத்தி பாடம் நடத்தியும், கரிமட்டை புத்திக்கு ஒன்ணும் புரியமாட்டேங்குது...' என புலம்பினார்.
அதை கேட்டதும் கடுப்பான அந்த ஆசிரியர் என் கையில் இருந்த எல்.ஜி.பெருங்காய விளம்பர காலண்டர் அட்டையை பிடிங்கி, என் தலையில் ஓங்கி அடித்தார். அட்டை துண்டுகளாக சிதறியதுடன் தலையில் காயமும் ஏற்பட்டது. அது தந்த வலியால் உத்வேகம் பெற்று வெறியுடன் படித்து வெற்றி படிகளில் ஏறினேன்.
எனக்கு, 74 வயதாகிறது. அரசு பணியாற்றி ஓய்வு பெற்றேன். அன்று வகுப்பறையில் சக ஆசிரியர், 'வாத்தியார் பிள்ளை மக்கு' என்ற கீழ்மையை பொறுக்க இயலாத என் தந்தை ஆவேசத்துடன் அடித்து காயப்படுத்தியது மனதில் ஆறாத வடுவாக உள்ளது. பள்ளியில் ஆசிரியராக கண்டித்த என் தந்தை, மாலை வீட்டில் என் தலையை நீவி ஆறுதல் படுத்தியது பசுமை நினைவாக மனதில் பதிந்து உள்ளது.
- வி.சுவாமிநாதன், சென்னை.
தொடர்புக்கு: 97898 99418

