
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், முனிசிபல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 1972ல், எஸ்.எஸ்.எல்.சி.,படித்த போது நடந்த சம்பவம்...
வகுப்பில் வழக்கமாக கணித பாடம் நடத்திய ஆசிரியை லட்சுமி பரிவு மிக்கவர். என் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். அதனால், 'எலெக்டிவ்' என்ற விருப்பப் பாடமாக, கணிதத்தை எடுத்திருந்தேன்.
ஆனால், எதிர்பாராத விதமாக மற்றொரு ஆசிரியையே அந்த வகுப்பை நடத்தினார். அவருக்கு என்னை கண்டால் பிடிக்காது என்பதால், 'பொது தேர்வில் இவள் தேர்ச்சி பெற மாட்டாள். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...' என சபதம் போட்டிருந்தார். இதை தெரிவித்து அன்று மாலையே வீட்டிற்கு அழைத்து, எலெக்டிவ் பாடத்துக்கு தனி பயிற்சி துவங்கினார் பக்கத்து வீட்டு ஆசிரியை. மிகவும் கவனமுடன் கற்றேன்.
ஆண்டு இறுதி தேர்வு எழுதியதும் என்னை அழைத்து, கேள்விகளுக்கு விடை எழுத வைத்து சரி பார்த்து திருப்தியடைந்தார். பொது தேர்வு முடிவு அறிவித்ததும் என் மதிப்பெண்ணை பார்த்து, 'மானம் காத்தாய்...' என, பாராட்டினார் பக்கத்து வீட்டு ஆசிரியை. அவருக்கு மனம் கனிந்து நன்றி சொன்னேன்.
என் வயது 74; இல்லத்தரசியாக இருக்கிறேன். எலெக்டிவ் பாடத்துக்கு தனி பயிற்சியளித்து முன்னேற உதவிய ஆசிரியை லட்சுமியை வணங்கி வாழ்கிறேன்.
- வசந்தா குமார், கோவை. தொடர்புக்கு: 86680 37451

