
கொத்தவரை செடி வகை தாவரம். சீனி அவரை என்றும் அழைப்பர். செடி மூன்று முதல், நான்கு அடி உயரம் வரை வளரும்.
இது, நைட்ரஜன் சத்தை மண்ணில் அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும்.
மிதமான சூரிய ஒளியும், ஈரப்பதமான காலநிலையும் இருந்தால் பலவகை மண்ணிலும் வளரும். இந்தியாவின் வடமேற்கு பகுதி மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் அதிகம் பயிரிடப்படுகிறது.
கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறைந்த எரிசக்தியும், அதிக நார்ச்சத்தும் உடையது. புரோட்டீன், கார்போ ைஹட்ரேட் சத்துகளும் நிறைந்துள்ளன.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் ஒன்று. உடல் எடை, கொழுப்பை குறைக்கும்; மலச்சிக்கலை போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும். போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
கொத்தவரையில் உள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.
- மு.நாவம்மா